தமிழகமும் நிலமும்17

வழியாகச் செல்லும் நதி மணிமுத்தாறு என்னும் பெயர் பெற்றுள்ளது.56

     இவ்வாறு நாட்டின் உயிரென விளங்கும் நதிகளின் பெயர்கள் சில
ஊர்களுக்கு அமைந்துள்ளன. திருஐயாறு என்பது சோழ நாட்டிலுள்ள ஒரு
பழைமையான ஊரின் பெயர். காவிரி முதலிய ஐந்து ஆறுகள் பரந்து பாயும்
வள நிலத்தில் அமைந்த நகரம் ஐயாறு என்று பெயர் பெற்றது போலும்.
பஞ்சநதம் என்று அதனை வட மொழியாளர் வழங்குவர்.

    தொண்டை நாட்டில் சேயாறு என்னும் நதியொன்று உண்டு. அதன்
கரையில் எழுந்த ஊரும் சேயாறு என்றே பெயர் பெற்றது.57 இன்னும்
சென்னை மாநகரின் வழியாகச் செல்லும் ஆறு ஒன்று அடையாறாகும்.58
அது செங்கற்பட்டிலுள்ள செம்பரம்பாக்கத்து ஏரியினின்றும் புறப்பட்டுச்
சென்னையின் வழியாகச் சென்று கடலோடு கலக்கின்றது. அவ்வாற்றுப்
பெயரே அடையாறு என்னும் பாக்கத்தின் பெயராயிற்று.

    இக் காலத்தில் சில ஆற்றுப் பெயர்கள் மாறிவிட்டாலும் அவற்றை
ஊர்ப் பெயர்களால் உணர்ந்து கொள்ளலாம். திருக்குற்றால மலையினின்று
புறப்பட்டுச் செல்கின்ற சித்ரா நதியோடு ஒரு சிறு நதி வந்து சேர்கின்றது.
புராணக் கதையில் அது கோதண்டராம நதியென்று கூறப்படுகிறது.59
வனவாசம் செய்த இராமர் சீதையின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டுத் தமது
கோதண்டத்தைத் தரையில் ஊன்றி உண்டாக்கிய நதியாதலால் அப் பெயர்
அதற்கமைந்த