மூவர் தேவாரமும் பெற்றுள்ள மூதூர்களில் ஒன்று திருவெண்காடு.
வடமொழியில் அது சுவேதவனம்
எனப்படும். ‘வேலைசூழ் வெண்காடு’ என்று
தேவாரம் பாடுதலால் அத் தலம்
கடலருகேயமைந்த காடு
என்பது இனிது
விளங்கும்.24 சுவேதகேது என்னும் மறையவன்
ஈசனை வழிபட்டுக் காலனைக் கடந்த
இடம் திருவெண்காடு என்பர்.25
அங்குள்ள முக்குளம் என்னும் தடாகமும் தேவாரத்தில் போற்றப்படுகின்றது.
திருவேற்காடு
சென்னைக்கு அணித்ததாக வுள்ள காடுவெட்டியாற்றின் கரையில்
அமைந்துள்ளது திருவேற்காடு.
அறுபத்து மூன்று
திருத்தொண்டர்களுள்
ஒருவராகிய மூர்க்க
நாயனார் பிறந்தருளிய அப் பதி திருஞான
சம்பந்தரால்
பாடப் பெற்றுள்ளது.
திருக்காரைக்காடு
இன்னும், காஞ்சி மாநகரின் ஒருசார், காரைச் செடிகள் நிறைந்த
கானகத்தில் ஒரு நறுமலர்ப்
பொய்கையின் அருகே ஈசன் திருக்கோயில்
எழுந்தது.
“தேர்ஊரும் நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீர்ஊரும் மலர்ப்பொய்கை நெரிக்காரைக் காட்டாரே”
என்ற தேவாரத் திருப்பாட்டில், அந் நகர வீதியின் அழகும், நன்னீர்ப்
பொய்கையின்
நீர்மையும் நன்கு
காட்டப்பட்டுள்ளன. அப் பொய்கை
இப்பொழுது வேப்பங்குளம் என்னும்
பெயரோடு
திருக்கோயிலுக்குத் தெற்கே
நின்று நிலவுகின்றது.26 |