172ஊரும் பேரும்

 ஆலம் பொழில்

 

   ஆல மரங்கள் நிறைந்த சோலையும் அரனார்க்கு உறைவிடமாயிற்று.
தென்பரம்பைக்குடி என்னும் ஊரின் அருகே நின்ற ஆலம் பொழிலில்
அமர்ந்தருளிய ஈசனைப் பாடினார் திருநாவுக்கரசர்.

      
 “திருவானைத் தென்பரம்பபைக் குடியின் மேய
        திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே”

என்பது அவர் திருவாக்கு. ஆலமர் கடவுளாகிய ஈசன் அமர்ந்தருளும்
ஆலந் துறைகளும், ஆலக் கோயில்களும் பிறவும் பின்னர்க் கூறப்படும்.
 

முல்லை வளம்

    முல்லைக் கொடிகள் செழித்துத் தழைத்து நறுமலர் ஈன்ற பதிகளுள்
ஒன்று திருக் கருகாவூர். செம் பொருளாகிய சிவ பெருமான் அம்முல்லை
வனத்தில் எழுந்தருளிய கோலத்தை,

         
“கடிகொள் முல்லை கமழும் கருகா வூர்எம்
          அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே”

என்று பாடினார் திருஞான சம்பந்தர். இன்றும் அவர் முல்லை வனநாதர்
என்றே அழைக்கப்படுகின்றார்.

                     
அடிக் குறிப்பு

1. “அன்றால் நிழற்கீழ் அருமறைகள் தானருளி” - திருவாசகம்,
திருப்பூவல்லி,13.

முருகனை “ஆலமர் கடவுட் புதல்வ” என்று திருமுருகாற்றுப் படை
அழைக்கின்றது.

2. “நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்” - திருநாவுக்கரசர் தேவாரம்,
திருக்கடம்பூர்ப் பதிகம்,9.


3. “திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
திருவானைக் காவில்உறைதேனே”
-திருநாவக்கரசர்
திருவானைக்காத் திருத்தாண்டகம்,6.