தமிழகமும் நிலமும்19

விரித்தாடும்; மந்திகள் கொஞ்சிக் குலாவிக் கூத்தாடும். இங்ஙனம் மயில்கள்

ஆடும் துறை மயிலாடு துறை என்றும், குரங்குகள் ஆடும் துறை குரங்காடு
துறை என்றும் பெயர் பெற்றன. மயிலாடுதுறை இப்போது மாயவரமாக
மாறியிருக்கிறது. காவிரியின் வடகரையில் ஒரு குரங்காடுதுறையும் தென்
கரையில் மற்றொரு குரங்காடு துறையும் உண்டு. இக் காலத்தில் தென்
குரங்காடு துறை ஆடுதுறை என்றே வழங்குகின்றது.62 இன்னும்,
காவிரியாற்றில் கடம்பந்துறை, மாந்துறை முதலிய பல துறைகள் பாடல்
பெற்ற பதிகளாக விளங்குகின்றன.63 நெல்லை நாட்டின் வழியாகச் செல்லும்
பொருநையாற்றில் பூந்துறை, குறுக்குத்துறை முதலிய துறைகள் உள்ளன.

அரங்கம், துருத்தி
 

   ஆற்றின் நடுவே அமைந்த இடைக்குறை வட மொழியில் ரங்கம் என்றும்,
தமிழ் மொழியில் துருத்தியென்றும் குறிக்கப்பெறும். காவிரி யாற்றில்
திருச்சிராப்பள்ளிக்கு அருகே சிறந்த ரங்கம் ஒன்று உள்ளது. அங்கே
கோவில் கொண்டருளும் பெருமாளை ஆழ்வார் பன்னிருவரும்
பாடியுள்ளார்கள். அவர்கள் அருளிய திருப்பாசுரங்களில் அவ்வூர்
திருவரங்கம் என்று போற்றப்பட்டுள்ளது. தஞ்சை நாட்டிலுள்ள குற்றாலத்தின்
பழம்பெயர் திருத்துருத்தி என்பதாகும். காவிரியாற்றின் நடுவே அமைந்த
திருத்துருத்தியின் சிறப்பினைத் திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.