என்று பாடியருளினார் திருநாவுக்கரசர். பாலைத்துறையுடைய பரமனைப்
பாலைவனநாதர் என்று இன்றளவும்
வழங்குதலால்,
பாலை மரங்கள் நிறைந்த துறையாக அது
முற்காலத்தில் இருந்ததாகத் தோன்றுகிறது.
திருத்தவத்துறை
இறைவன் அருள் விளங்கும் துறைகளுள் ஒன்று திருத்தவத்துறை.
“பண்டு எழுவர் தவத்துறை” என்று
இப்பதியைத் திருநாவுக்கரசர்
குறித்தருளினார். முன்னாளில் முனிவர் எழுவர் தவம் புரிந்த
பெருமை
அதற்குரிய தென்பது அவர் திருவாக்கால் விளங்கும். இத்தகைய பெருமை
சான்ற தவத்துறைக்குரிய
தேவாரப் பாடல்
கிடைத்திலேதேனும் திருஞான
சம்பந்தர் அப்
பதியை வணங்கிப் பாடினார்
என்று திருத்தொண்டப்
புராணம் கூறும். திருச்சிராப்பள்ளியையும் திருவானைக்காவையும் வழிப்பட்ட
பின்பு, “மன்னும் தவத்துறை வானவர் தாள் எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே
இன்தமிழ் மாலை
கொண்டேத்தினார்” என்று சேக்கிழார் கூறுதலால்,
திருஞான சம்பந்தர் தவத்துறைப் பெருமானைப்
பாமாலை பாடித் தொழுதார்
என்பது தெளிவாகத் தெரிகின்றது.2 ஆயினும், அப் பாடல் கிடைக்கப்
பெறாமையால் தவத்துறை வைப்புத் தலங்களுள் ஒன்றாக
வைத்தெண்ணப்படும்.3 இப்பொழுது லால்குடி என வழங்கும் ஊரே
பண்டைத் தவத்துறை என்பது சாசனங்களால் விளங்குகின்றது. |