திருப்பாசுரங்களிலும் தலப் பெயரோடு இணைத்துக் கூறப்படும் துறைகளைக்
காண்போம்.
திருவெண்ணெய்
நல்லூர் அருட்டுறை
பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் ஈசன்
கோயில் கொண்டருளும் இடம் அருட்டுறை எனப்படும். தேவாரம் பாடிய
மூவருள் ஓருவராகிய சுந்தரமூர்த்தியை
ஆட்கொண்ட துறை
அவ்வருட்டுறையேயாகும்.
இதனை அவர் தேவாரத்தால் அறியலாம்.
“பித்தா பிறைசூடி” என்று அவர் எடுத்த திருப்பதிகத்தில் “பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா” என்று பாடும்
பான்மையால் ஆண்டவன் உறைவிடம் அருட்டுறை என்றும்
போற்றப்படுகின்றது.17
திருநெல்வாயில்
அரத்துறை
திருப்பெண்ணாகடத்துக்கு அண்மையில் நிவாநதியின் கரையில்
உள்ளது நெல்வாயில் என்னும் பதி. அது
மூவர் தேவாரமும் பெற்றது.
அரத்துறையென்பது அங்கமைந்த திருக்கோயிலின் பெயர்.
“கந்த மாமலர் உந்திக்
கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே”
என்னும் தேவாரத்தால் அரத்துறையின் செம்மை விளங்கும். இப்பொழுது
நெல்வாயிலும் அரத்துறையும் தனித்தனி ஊர்களாகக் காணப்படுகின்றன.
நெல்வாயில் என்ற பழம் பெயர் நெய்வாசல் எனவும், திரு அரத்துறை
என்பது திருவடத்துறை எனவும் மருவி வழங்கும்.18 |