என்று பாடினார் திருஞான சம்பந்தர். இங்ஙனம் ஈசனார் அமர்ந்தருளும்
பாண்டிக் கொடுமுடி என்னும்
திருக்கோயில்
கறையூர் என்ற ஊரைச் சேர்ந்த
தென்பது
தேவாரப் பாட்டால் விளங்குவதாகும்.
“கற்றவர்தொழு தேத்தும் சீர்க்கறை
யூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனைநான் மறக்கினும்
சொல்லும்நா நமச்சி வாயவே”
என்பது சுந்தரர் தேவாரம். இக் காலத்தில் கறையூர் என்னும் பெயர்
மறைந்து, கெடுமுடி என்ற
கோயிற் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது.
எனினும், இறைவன் கறையூரில் உறைகின்றான் என்பது,
“கறையூர் கருப்பறியல் கன்றாப் பூரும்
கயிலாய நாதனையே காண லாமே”
என்ற திருநாவுக்கரசர் வாக்கால் தெளியப்படும்.
திருந்துதேவன்குடி-அருமருந்து
இந் நாளில் வேப்பத்தூர் என வழங்கும் திருந்து தேவன் குடியில்
அமைந்த ஈசன் கோயில்
அருமருந்து
என்னும் பெயர் பெற்றிருந்ததாகத்
தெரிகின்றது. அருமருந்துடைய ஆண்டவனைப்
பாடினார் திருஞான
சம்பந்தர்.
“திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி
அருமருந்தாவன அடிகள் வேடங்களே”
என்று அவர் பாடியுள்ள பான்மையால் அருமருந்து என்பது முதலில்
இறைவன் திருநாமமாக அமைந்தது.
பின்பு அவர் கோயில் கொண்ட
தலத்தைக் குறிப்பதாயிற்றென்று தோற்றுகின்றது. |