நல்லூர்-பெருமணம்
சைவ உலகம் தலைக்கொண்டு போற்றும் திருத் தொண்டராகிய
திருஞான சம்பந்தர் இறைவனது
சோதியிற்
கலந்த இடம் நல்லூர்ப் பெருமணம் என்று
அவர் வரலாறு கூறுகின்றது. நல்லூர் என்னும்
ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தின் பெயர் பெருமணம் என்பதாகும்.
“நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன் தாள்தொழ வீடெளி தாமே.”
என்று திருஞான சம்பந்தர் பாடுதலால் இவ்வுண்மை விளங்கும். பெருமணம்
என்னும் சிறந்த திருக்கோயிலைத்
தன்னகத்தே யுடைய நல்லூர்,
பெருமணநல்லூர் என்றும் வழங்கலாயிற்று. இந் நாளில் அப் பழம்
பெயர்கள்
மறைந்து ஆச்சாபுரம் என்று அவ்வூர் அழைக்கப்படுகின்றது.
நாகை-காரோணம்
காரோணம் என்னும் பெயர் பூண்ட திருக்கோயில் தமிழ் நாட்டில்
மூன்று உண்டு. அவற்றுள் ஒன்று,
சோழநாட்டுக்
கடற்கரையில் அமைந்த நாகப்பட்டினத்தில்
உள்ளது. தேவாரத்தில் அது ‘கடல்
நாகைக்
காரோணம்’ என்று போற்றப்படும்.
“கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதியேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப்பிறந்தவர் பிறந்திலாரே”
என்று திருநாவுக்கரசர் அதன் பெருமையை எடுத்துரைத்தார். காயாரோகணம்
என்னும் சொல்
காரோணம் என மருவிற்றென்பர்.
குடந்தை-காரோணம்
கும்பகோணம் என்னும் குடமூக்கில் பாடல் பெற்ற கோயில்களுள் ஒன்று
காரோணமாகும். |