246ஊரும் பேரும்

                    தளியும் பள்ளியும்
 

திருவாரூர்-மண்தளி


    குகைக் கோயில்களும் கற் கோயில்களும் தோன்று முன்னே,
மண்ணாலயங்கள் பல இந் நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குச்
சான்றுகள் உள்ளன. பழமையான நகரமாகிய திருவாரூரில் உள்ள பாடல்
பெற்ற கோயில்களுள் ஒன்று மண்தளி என்று குறிக்கப்படுகின்றது. அம்
மண்தளியில் அமர்ந்த மகாதேவனை,

       
“தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
        அம்மானே பரவையுள் மண்டளி யம்மானே”

என்று சுந்தரர் பாடும் பான்மையால், தமிழ்ப்புலமை வாய்ந்தோரைத்
தலையளித் தாட்கொண்டருளும் ஈசன் கருணை இனிது விளங்குவதாகும்.
அத்தளியில் அமர்ந்த ஈசனை மண்தளியுடைய மகாதேவர் என்று சாசனம்
குறிக்கின்றது.1
 

கச்சிப் பலதளி


    தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சியில் திருக்கோயில்கள்
பலவுண்டு. அவற்றைக் கண்டு விம்மிதமுற்ற திருநாவுக்கரசர்,

        
 “கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
          கயிலாய நாதனையே காணலாமே”

என்று பாடினார். அந் நகரிலுள்ள பழமையான தளிகளுள் ஒன்று
திருமேற்றளி என்பதாகும்.

       
“பாரூர் பல்லவனூர் மதிற்கச்சி மாநகர்வாய்ச்
        சிரூ ரும்புறவில் திருமேற் றளிச்சிவனை”

என்று பாடினார் சுந்தரர். அத்திருக்கோவில் இப்பொழுது காஞ்சி மாநகரின்
ஒரு பாகமாகிய பிள்ளைப் பாளையத்தில் உள்ளது.