தேவும் தலமும்263

பசுபதீச்சுரம்
 

“அங்கணர்க் கிடமாகிய பழம்பதி ஆவூர்” என்று சேக்கிழாரால் சிறப்பிக்கப்
பெற்ற ஆவூரில் அமைந்தது பசுபதீச்சுரம்.

            
 “பத்திமைப் பாடல் அறாத அவ்வூர்ப்
              பசுபதி ஈச்சுரம் பாடு நாவே”

என்று அத் திருக் கோயிலைத் திருஞான சம்பந்தர் பாடியருளினார்.
ஆன்மகோடிகளாகிய பசுக்களுக் கெல்லாம் பதியாக விளங்கும் ஈசனைப்
பசுபதி யென்று போற்றுதல் சைவ முறை யாதலின், அவர் உறையும் கோயில்
பசுபதீச்சுரம் என்னும் பெயர் பெற்றது.

பாதாளீச்சுரம்

   தஞ்சை நாட்டு மன்னார்க்குடிக்கு வடபாலுள்ளது பாதாளீச்சுரம்.
திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றுள்ள அக்கோயில் அமைந்துள்ள இடம்
பாம்புணி என்று முற்காலத்தில் பெயர் பெற்றிருந்த தென்பது சாசனத்தால்
புலனாகின்றது. இப்பொழுது அப் பெயர் பாமணியென மருவியுள்ளது. பாம்பு
வடிவுடைய முனிவர் சிலை யொன்று பாதாளீச்சுரத்திற் காணப்படுகிறது.
 

முண்டீச்சுரம


  பெண்ணை யாற்றங் கரையில் திரு வெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கே
யுள்ளது திருமுண்டீச்சுரம். அச்சிவாலயத்தில் அமர்ந்த ஈசனைச் சிவலோகன்
என்று போற்றினார்.

     
 “பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்டமெல்லாம்
       பரித்துடனே நிமிர்ந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
       திரிந்துலவு திருமுண்டீச் சுரத்துமேய
       சிவலோகன் காண்அவன்என் சிந்தையானே”