276ஊரும் பேரும்

விளங்கும். மாமல்லபுரத்தில் பல்லவ மன்னனால் கட்டப்பட்டிருந்த இரண்டு
சிவாலயங்கள் சாசனத்திற் குறிக்கப்படுகின்றன. அவற்றுடன் பள்ளி
கொண்டார் கோவிலையும் சேர்த்துச் சாசனம் கூறுதலால், மூன்று
கோவில்களும் ஒன்றையொன்று அடுத்திருந்த பான்மை அறியப்படும்.4
அவற்றுள் இராஜசிம்ம பல்லவேச்சுரம் என்னும் சிவாலயம் இராஜசிம்மனால்
எடுக்கப்பட்டதாகும். எனவே, காஞ்சிபுரத்தில் இராஜசிம்மேச்சுரம் என்னும்
கைலாசநாதர் கோயில் கட்டிய பல்லவனே மாமல்ல புரத்தில்
பல்லவேச்சுரமும் கட்டினான் என்று தெரிகின்றது. மல்லையில் உள்ள
மற்றொரு சிவாலயம் க்ஷத்திரிய சிம்ம பல்லவேச்சுரம் என்ற பெயரால்
குறிக்கப்படுகின்றது. இராஜசிம்மனுக்கு க்ஷத்திரிய சிகாமணி யென்னும்
விருதுப் பெயர் இருந்ததாகத் தெரிகின்றமையால் இக் கோவிலும் அவனே
உண்டாக்கினான் என்பர்.5

    பரமேச்சுரப் பல்லவன் காஞ்சிபுரத்திற்கு அண்மையிலுள்ள கூரம்
என்னும் ஊரில் தன் பெயரால் ஒரு சிவாலயம் கட்டி அதற்குப் பரமேஸ்வர
மங்கலத்தைத் தானமாக வழங்கிய செய்தி கூரத்துச் செப்பேடுகளில்
கூறப்படுகின்றது.

பஞ்சவனீச்சுரம

    பாண்டி நாட்டிலும் பல ஈச்சுரங்கள் இருந்தன. மதுரையைச் சூழ்ந்திருந்த
தலங்களுள் ஒன்று பஞ்சவனீச்சுரம் என்னும் பெயர் பெற்றிருந்த தென்பது
கல்லாடத்தால் அறியப்படும்.6