278ஊரும் பேரும்

சீர்மைக்கு ஒரு சிறந்த சான்றாக நின்று நிலவுகின்றது. அத்திருப்பணியை
மிக்க ஆர்வத்தனமாய்ச் செய்து முடித்தான் அம் மன்னன் என்பது
சாசனங்களால் விளங்குகின்றது. இராஜராஜேச்சுரம் என்று பெயர் பெற்ற
அக்கோவில் தமிழகத்தின் பண்பாட்டை விளக்கும் கலைக்கோயிலாகவும்
அமைந்துள்ளது. அங்கு இறைவன் திருவுருவத்தை நிறுவும் பொழுது
உடனிருந்து உதவிய கருவூர்த் தேவர் பாடிய பாட்டு திருவிசைப்பா என
வழங்குகின்றது. “இஞ்சிசூழ் தஞ்சை இராஜராஜேச்சுர”த்தின் ஏற்றமும்
தோற்றமும் அப் பாட்டில் இனிது காட்டப்படுகின்றன. விண்ணளாவி நின்ற
திருக்கோவிலில் கண்ணையும் கருத்தையும் கவரும் ஆடல் பாடல்கள்
நிகழ்ந்தன என்பது,

       
“மின்னெடும் புருவத் திளமயில் அனையார்
        விலங்கல்செய் நாடக சாலை
        இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
        இராஜரா ஜேச்சுரத் திவர்க்கே”
 

என்னும் திருவிசைப் பாவால் இனிது விளங்கும்.

    தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்துப் புரிசை நாட்டில்
இராஜராஜேச்சுரம் என்னும் சிவாலயம் ஒன்று எழுந்தது.11 அக் கோயிற்
சிறப்பினால் சிவபுரம் என்னும் பெயர் அவ்வூருக்கு வழங்கலாயிற்று.

    திரு விந்தனூர் நாட்டைச் சேர்ந்த குளத்தூரில் பெருமா நம்பி என்னும்
பல்லவ ராயர் ஒரு சிவாலயம் கட்டி, அதற்கு இராஜராஜேச்சுரம் என்று
பெயரிட்டார். இப்போது அவர் பெயரால் வழங்கும் பல்லவராயன்
பேட்டையில் உள்ள ஆலயம் அதுவே.12