தேவும் தலமும்293

சுவாமிநாதன் என்னும் பெயருடையார். மூலமந்திரமாகிய பிரணவத்தின்
உட்பொருளை ஈசனார் மணங்குளிர எடுத்துரைத்த காரணத்தால் சிவகுரு
என்றும், சுவாமி நாதன் என்றும் முருகன் பெயர் பெற்றார் என்பர். சுவாமி
நாதனுக்குரிய மலை சுவாமி மலை என்று அழைக்கப் படுகிறது.

திருஆவிநன்குடி

    முருகவேளுக்குரிய படை வீடுகளுள் ஒன்றாகிய பழனி மலையும் பழம்
பெருமை வாய்ந்ததாகும். ஆதியில் அது பொதினி என்று பெயர்
பெற்றிருந்தது. வேளிர் குலத்தலைவர்கள் அம் மலையையும் அதைச் சார்ந்த
நாட்டையும் ஆண்டு வந்தனர்.

      
“முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
       பொன்னுடை நெடுநகர்ப் பொதினி”

என்னும் அகநானூற்றுப் பாட்டால் வேளிர் குலத்தைச் சேர்ந்த ஆவி என்ற
குறுநில மன்னன் பொதினி என்னும் நகரத்தில் ஆட்சி புரிந்தான் என்பது
அறியப்படும். இங்ஙனம் ஆவியர் குடியினரால் நெடுங்காலமாக ஆளப்
பெற்ற நகரம் ஆவிநன்குடி என்று பெயர் பெற்றது. அப் பதியில் அமர்ந்த
முருகனை, “ஆவிநன்குடி அமர்தலும் உரியன்” என்று திரு
முருகாற்றுப்படை போற்றுகின்றது.

சித்தன் வாழ்வு

    சித்தன் வாழ்வு என்ற பெயரும் ஆவிநன்குடிக்கு உண்டு என்பர்.
சித்தன் என்பது முருகனுக்குரிய பெயர்களுள் ஒன்றாதலால், அவர் படை

வீடு சித்தன் வாழ்வு என்னும் பெயர் பெற்றதென்பர்.14