306ஊரும் பேரும்

இப் பெயரிலே தோகை மயிலின் தோற்றமும், துறையின் அழகும் அறவே
மறைந்து போய்விட்டன.

விருத்தாசலம்

    தென்னார்க்காட்டிலுள்ள சிறந்த சிவ ஸ்தலங்களில் ஒன்று
திருமுதுகுன்றம். அப் பதியில் கோயில் கொண்டுள்ள இறைவனைப் பழமலை
நாதர் என்று இன்றும் சைவர்கள் போற்றுகின்றார்கள். அவ்வூரின் பெயர்
வட மொழியில் விருத்தாசலம் எனப் பெயர்த்து அமைக்கப்பட்டது. இன்று
பழம் பெயர் மறைந்து புதுப் பெயரே வழங்கி வருகின்றது.

கும்பகோணம்

    சோழ நாட்டில் தெய்வ நலம் சிறக்கப் பெற்ற ஒரு தலம் குடமூக்கு
என்னும் பெயர் பெற்றிருந்தது. அது குடந்தை எனத் தேவாரப்பாடல்களிலும்,
ஆழ்வார் திருப்பாசுரங்களிலும் குறிக்கப்படுகின்றது. அவ்வூரின் பெயர்
கும்பகோணம் என்று இப்போது வழங்குகின்றது.

    இவ்வாறு பெயர் மாறிய ஊர்கள் இன்னும் பல உண்டு. திருமறைக்காடு
வேதாரண்யமாக விளங்குகின்றது. கீழைத் திருக்காட்டுப்பள்ளி ஆரணீசுவரர்
கோயிலாக அமைந்திருக்கின்றது.

இருபெயர்கள்

    இன்னும், சில ஊர்கள் பழைய தமிழ்ப் பெயரோடு வடமொழி
நாமங்களையும் உடன் கொண்டு வழங்கக் காணலாம். திருவையாறு என்ற
தமிழ்ப் பெயரோடு பஞ்சநதம் என்னும் வடமொழிப் பெயரும்
வழங்குகின்றது.