சிவனுக்கு முத்தமிடும் கோலத்தில் ஒரு திருவுருவமும் பிற்காலத்தில்
அமைவதாயிற்று.
திருவெண்டுறை
தஞ்சை நாட்டிலுள்ள மன்னார்குடிக்கு அருகே திருவெண்டுறை
என்னும் சிவஸ்தலம் உள்ளது. பிற்காலத்தில்
அப் பெயர் திருவண்டுதுறை
எனத் திரிந்தது.
பிருங்கி முனிவர் வண்டுருவம் கொண்டு ஈசனை
வணங்கிய இடம் அதுவே எனப் புராணமியற்றிய புலவர்கள் காரணம்
கற்பிப்பா ராயினர்.
மகாபலிபுரம்
இன்னும், மல்லை என்று ஆழ்வார்கள் திருப்பாசுரத்திலும்,
மாமல்லபுரம் என்று சாசனங்களிலும் குறிக்கப்படுகின்ற
ஊர் மகாபலிபுரம்
எனத் திரிந்து, மகாபலி
மன்னனோடு தொடர்புறுவதாயிற்று. அக்கதைக்குச்
சான்றாக அக் கோயிற் பாதையில் மகாபலி மன்னன் அரசு வீற்றிருக்கும்
கோலத்தில் ஒரு சிற்பமும் காணப்படுகின்றது.7
தென்காசி
உத்தரகாஞ்சி
பெருமை வாய்ந்த ஊர்ப் பெயர்களின் வாசியைப் போற்றும் ஆசை
இந் நாட்டில் என்றும் உண்டு. காசியும், காஞ்சியும்
முன்னாளிற் சிறந்து
விளங்கிய நகரங்கள். வட
காசியின் மீதுள்ள ஆசையால் தமிழ் நாட்டில்
தென்காசி என்னும் ஊர் தோன்றிற்று. காஞ்சியின் பெருமையறிந்த ஆந்திர
தேசத்தார் கோதவரி நாட்டில் உத்தர காஞ்சி என்று ஓர் ஊருக்குப்
பெயரிட்டார்கள். |