திருப்பூவணம் என்றார்கள். முள்ளி நாட்டுத் தென்திருப்பூவணம் என்று
சாசனத்திற் குறிக்கப்படுகின்ற இவ்வூர், தென் திருப்புவனம் என்னும்
பெயரோடு அம்பாசமுத்திர வட்டத்தில் உள்ளது. இங்குள்ள திருக்கோயிலும்
புஷ்பவனேஸ்வரம் என்றே வழங்குவதாகும்.12
திருவரங்கம்
காவிரி யாற்றின் நடுவே அமைந்த திருவரங்கம் வைணவ உலகத்தில்
தலைசிறந்து திகழும் திருப்பதியாகும். அதன் பெருமை யறிந்த
தென்னார்க்காட்டு மக்கள் கள்ளக் குறிச்சி
வட்டத்தில் பெருமாளுக்கு ஒரு
திருக் கோவில்
கட்டி, அதற்கு உத்தர திருவரங்கம் என்று
பெயரிட்டார்கள். திருமாலிடம் தலை சிறந்த அன்பு வாய்ந்த கிருஷ்ண
தேவராய மன்னர் காலத்தில் உத்தர திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர்
கோவிலுக்கு மூன்று ஊர்கள் வழங்கப்பட்ட செய்தி கல்வெட்டால்
விளங்குகின்றது.13 இக் காலத்தில் திருவரங்கம் என்பதே அவ்வூரின் பெயர்.
திருநாகேச்சுரம்
சோழ நாட்டிலுள்ள பாடல் பெற்ற திருநாகேச்சுரம் திருத்தொண்டர்
புராணமியற்றிய சேக்கிழார் உள்ளத்தைக் கவர்ந்த சிறந்த சிவஸ்தலம்.
“நித்தன்உறை திருநாகேச் சுரத்தில் அன்பு
நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்”
என்று அவர் வரலாறு கூறும். அருட் செல்வமும்
பொருட் செல்வமும்
ஒருங்கே பெற்ற சேக்கிழார்,
தமது ஊராகிய குன்றத்தூரில் ஒரு
திருக்கோயில் கட்டி, அதற்குத்
திருநாகேச்சுரம் என்று பெயரிட்டார். |