தேவும் தலமும்315

                  வைப்புத் தலங்கள்

     தேவாரப் பாமாலை பெற்ற தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்றும்,
அப் பாசுரங்களில் பெயர் குறிக்கப் பெற்ற தலங்கள் வைப்புத் தலங்கள்
என்றும் கூறப்படும். எனவே, திருப்பாசுரத் தொடர்களையும்,
சாசனங்களையும் துணைக் கொண்டு வைப்புத் தலங்களுள் சிலவற்றை
அறிந்து கொள்ளலாம்.

 

பேரூர்

     பேரூர் என்னும் பெயருடைய சில ஊர்கள் சிறந்த சிவஸ்தலங்களாய்
விளங்குகின்றன. “பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான், பிறவா நெறியானே”
என்று சுந்தரர் பேரூர் இறைவனைக் குறித்தருளினார். கொங்கு நாட்டில் ஒரு
பேரூர் உண்டு.
 
தேவாரத்தில்,

         
“ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
          மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப்

          பேரூரர் பெருமானைப் புலியூர்ச்
          சிற்றம்பலத்தே பெற்றாமன்றே”

என்று சுந்தரர் அப் பேரூரைப் பாடியருளினார். அவர் திருப்பாட்டால்
கொங்கு நாட்டில் காஞ்சி நதிக் கரையில் அவ்வூர் அமைந்துள்ள தென்பது
அறியப்படும். காஞ்சி நதி இப்பொழுது நொய்யலாறு என்று
அழைக்கப்படுகின்றது. சைவ உலகத்தில் பேரூர் மேலைச் சிதம்பரம் என்று
போற்றப்படுவதாகும்.