334ஊரும் பேரும்

மற்றும் ஒன்பதூர் வணிகருடன் சேர்ந்து, ஓர் ஊரை விலைக்கு வாங்கித்
திருப்பாசூர்க் கோயிலுக்குத் தேவதானமாக வழங்கிய செய்தியைக் கூறுவது
அச் சாசனம்.10

திருத்தொண்டத் தொகை மங்கலம்

     திருத்தொண்டத் தொகை என்பது திருத்தொண்டர்களாகிய
சிவனடியாரின் செம்மையைப் போற்றும் தேவாரத் திருப்பதிகம். “தில்லை
வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றெடுத்துச் சுந்தரர் பாடிய
அப்பதிகமே திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்திற்கு
அடிப்படையாயிற்று. இத் தகைய திருத் தொண்டத் தொகையில் ஈடுபட்ட
சைவ மன்னர் அப் பெயரைச் சில ஊர்களுக்கு இட்டார்கள். திருக் கடவூர்
மயானத்துச் சிவாலயத்தில் உள்ள சாசனத்தில் திருத் தொண்டத் தொகை
மங்கலம் என்ற ஊர் குறிக்கப்பட்டுள்ளது.11

தேவதானம்

     திருக் கோயிலுக்கு அரசர் இறையிலியாக விட்ட நிலங்களும்,
ஊர்களும் தேவதானம் எனப்பட்டன. இத் தகைய தானம் தமிழ் நாட்டிற்
சிறந்திருந்த தென்பது சாசனங்களாலும் ஊர்ப்பெயர்களாலும் அறியப்படும்.
செங்கற்பட்டுப் பொன்னேரி வட்டத்தில் தேவதானம் என்னும் ஊர் உண்டு.
தஞ்சை நாட்டு மன்னார்குடி வட்டத்தில் மற்றொரு தேவதானம்
உள்ளது. இராமநாத புரத்தைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில்
இன்னொரு தேவதானம் இருக்கின்றது. மதுரை நாட்டுப் பெரியகுள
வட்டத்தில் தேவதானப் பட்டி என்பது ஓர் ஊரின் பெயர்.