342ஊரும் பேரும்

                திருமாலும் திருப்பதிகளும்

     தொன்று தொட்டுத் தமிழ் நாட்டார் வழிபடும் தெய்வமாகிய
திருமாலின் திருக்கோலம், பண்டை இலக்கியங்களிலும் திருப்பாசுரங்களிலும்
அழகுற எழுதிக் காட்டப்படுகின்றது. திருவேங்கடம் என்னும் திருப்பதி
மலையில்,

          
 “ நன்னிற மேகம் நின்றது போலச்
            செங்கண் நெடியோன் நின்ற வண்ணம”

     சிலப்பதிகாரத்தில் இலங்குவதாகும். அவர் நின்றருளும் நீர்மையால்
அம் மலை “ நெடியோன் குன்றம” என்னும் பெயர் பெற்றது. திரு
அரங்கத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகின்றார் திருமால்.
திருவரங்கம் என்றும், ஸ்ரீரங்கம் என்றும் வழங்கும் அப் பதியே
வைணவர்களால் கோயில் என்றும், பெரிய கோயில் என்றும்
கொண்டாடப்பெறும். திருவேங்கடமும் திருவரங்கமும் வைணவ உலகத்தின்
இரு கண்களாக விளங்குகின்றன.

     திருமால் நின்றும், இருந்தும், பள்ளிகொண்டும் அடியார்க்குச் சேவை
சாதிக்கின்றார். தென்பாண்டி நாட்டில் இம் மூன்று திருக் கோலத்தையும்
மூன்று திருப்பதிகளிற் கண்டு போற்றினார் நம்மாழ்வார்.

          
 “புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை இருந்து
            வைகுந்தத்துள் நின்று”

அருள்கின்றார் திருமால் என்பது அவர் திருவாய் மொழி.1