தேவும் தலமும்345

திருவிடவெந்தை
 

     தொண்டை நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று திருவிட வெந்தை என்று
பெயர் பெற்றது. அங்குள்ள பெருமாள் திருமங்கையாழ்வாரால் மங்களா
சாசனம் செய்யப் பெற்றவர். எந்தை என்பது அவர் திருநாமம். ஸ்ரீ வராக
மூர்த்தி வடிவாகவுள்ள அப் பெருமாள் தமது இடப் பக்கத்தில் பூமி
தேவியை ஏந்திய கோலமாகக் காட்சி தருதலால் இட எந்தை எனப் பெயர்
பெற்றார் என்பர்.

       
  “அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
          ஆலயம் மாயனே அருளால்
          என்னும்இன் தொண்டர்க் கின்னருள் புரியும்

          இடவெந்தை எந்தை பிரானை”
 
என்று ஆழ்வார் பாடுதலால் அவர் திருநாமம் இட வெந்தை என்பது இனிது
விளங்கும். கொங்கு நாட்டில் அவிநாசி யெனும் ஈசன் பெயர் ஊர்ப் பெயராக

வழங்குதல் போன்று, இடவெந்தை என அத் தலத்திற்கு வழங்கலாயிற்று.
இப்பொழுது மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்திற்கு அருகே திருவடந்தை
என்ற பெயர் கொண்டு விளங்கும் பதி அதுவே. எனவே, தொண்டை
நாட்டில் பூதேவியை வலமும் இடமும் வைத்து, வலவெந்தை யெனவும், இட
வெந்தை யெனவும் வணங்கப்பெற்ற திருமால் பெருமை இனிது தோன்றும்.
 

திருக் கண்ணபுரம்

     கண்ணனுக்குரிய திருப்பதிகளுள் விதந்தெடுத்துரைக்கப் படுபவன
ஐந்து. அவை “பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்” என்று பாராட்டப்படும்.
தஞ்சை நாட்டு நன்னிலத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ள
திருக்கண்ணபுரம் அவற்றுள் ஒன்று.