346ஊரும் பேரும்

“மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான், அரணமைந்த மதிள் சூழ்
திருக் கண்ணபுரத்து” ள்ளான் என்று நலமுறப் பாடியருளினார் நம்மாழ்வார்.
திருமங்கை யாழ்வார் நூறு திருப்பாசுரங்களால் அக் கண்ணபுரப்
பெருமாளைப் போற்றினார். “கருவரை போல் நின்றானைக் கண்ணபுரத்
தம்மானை” என்று அவர் பாடிய பாசுரத்தால் அப்பதியில் நின்று காட்சி
தரும் நெடுமாலின் கோலம் நன்கு விளங்கும்.
  
திருக்கண்ணன்குடி
 

     தஞ்சை நாட்டு நாகை வட்டத்தில் உள்ளது திருக்கண்ணன்குடி. அங்கு
நின்றருளும் கண்ணனைத் திருமங்கை யாழ்வார் பாடியுள்ளார்.

       
“செழுமையார் பொழில்கள் தழுவும் நன்மாடத்
       திருக்கண்ணங் குடியுள் நின்றானே”

என்பது அவர் திருவாக்கு.
 

திருக்கண்ணமங்கை

     திருவாரூருக்கு வடமேற்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது
திருக்கண்ணமங்கை என்னும் திருப்பதி.

     
 “கன்னலைக் கரும்பி னிடைத்தேறலைக்
       கண்ண மங்கையுள் கண்டு கொண் டேனே”

என்று இப் பதியில் நின்றிலங்கும் பக்தவத்சலனைத் திரு மங்கை யாழ்வார்
பாடித் தொழுதார்.

கபிஸ்தலம்
 

    தஞ்சை நாட்டுப் பாபநாசத்துக்கு அண்மையிலுள்ள கவித் தலத்தைக்
‘கண்ணன் கவித்தலம்’ என்பர். கவிக்குல நாயகனாகிய அனுமனுக்கு அருள்
புரிந்த இடமாதலால் அவ்வூர் கவித்தலம் கபிஸ்தலம் என்று பெயர்
பெற்றதாகக் கருதப்படுகின்றது.