358ஊரும் பேரும்


சமணமும சாக்கியமும்
 


எட்டு மலைகைள்
 

       முன்னாளில் சமண சமயம் தமிழ் நாட்டில் பல பாகங்களிற்
பரவியிருந்ததாகத் தெரிகின்றது. சமண முனிவர்கள் பெரும்பாலும் தலைமை
நகரங்களின் அருகே தம் தவச் சாலைகளை அமைத்துச்
சமயப்பணியாற்றுவாராயினர். பாண்டிய நாட்டில், நெடுமாறன் அரசு புரிந்த
ஏழாம் நூற்றாண்டில் சமண மதம் எங்கும் ஆதிக்க முற்றிருந்த
பான்மையைப் பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.1 அக்காலத்தில் மதுரையின்
அருகேயுள்ள குன்றுகளைச் சமண முனிவர்கள் தம் உறையுளாகக்
கொண்டிருந்தார்கள் என்பது திருஞான சம்பந்தர் தேவாரத்தால்
தெரிகின்றது. ஆனை மாமலை ஆதியாய இடங்களில் சமணர் வாழ்ந்தனர்
என்று அவர் குறித்தவாறே மற்றொரு பழம் பாட்டும் எட்டு மலைகளை

எடுத்துரைக்கின்றது.

             
“பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி
             அருங்குன்றம் பேராந்தை ஆனை -இருங்குன்றம்
             என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
             சென்றெட்டு மோபிறவித் தீங்கு”


      என்ற பாட்டிலுள்ள பரங்குன்றம் என்பது மதுரைக்குத் தென்
மேற்கிலுள்ள திருப்பரங்குன்றமாகும். ஆனையென்பது வடகிழக்கிலுள்ள
ஆனை மலை; இருங்குன்றம் என்பது அழகர் மலை. இவ்வெட்டு
மலைகளிலும் இருந்த சமண முனிவர் எண்ணாயிரவர் என்பர்.3