374ஊரும் பேரும்

திருநதியைப் “பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை” என்று
போற்றினார் கம்பர். அந் நதியின் பெயர் இலங்கையின் பழம் பெயராக
வழங்கிற் றென்பர்.3 அங்குத் திருநெல்வேலி என்ற பெயருடைய ஊர்
இன்றும் உள்ளது.

       இலங்கைத் தீவகத்தில் நெடுங்காலமாகத் தமிழர் வாழ்ந்து வரும்
பகுதி யாழ்ப்பாணம் ஆகும். யாழ்ப்பாணர் என்பார் பண்டைப் பாணர்
குலத்தில் ஒரு வகுப்பார்.

           
“குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
            வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும்”4


       பாணர் பெருமை பழைய தமிழ்ப் பனுவல்களால் விளங்கும். நற்றமிழ்
வல்ல ஞான சம்பந்தருடன் தலந்தொறும் சென்று அவர் பாடிய தமிழ்ப்
பாட்டை யாழில் அமைத்து, இன்னிசை யமுதமாக வழங்கிய திரு நீலகண்ட
யாழ்ப்பாணர் என்னும் திருத்தொண்டர் அவ்வகுப்பைச் சேர்ந்தவர். இத்
தகைய யாழ்ப்பாணர் குடியேறி வாழ்ந்த இலங்கைப் பகுதி யாழ்ப்பாணம்
என்று பெயர் பெற்றது. கால கதியில் அச் சொல்லில் உள்ள ழகர வொற்று
நழுவி யாப்பாணம் என்றாயிற்று. பின்பு, அச் செயல் பிற நாட்டார் நாவில்
அகப்பட்டு யாப்பனம் என்றும், ஜாப்பனம் என்றும் சிதைந்து, இப்பொழுது
ஜாப்னா என வழங்குகின்றது.

       இன்னும், இயற்கை வளமுடைய பல நாடுகளில் தமிழர் குடியேறி
வாழத் தலைப்பட்டனர். அவர் சென்ற இடமெல்லாம் சீர் பெருகிற்று. மலய
நாட்டுக்குப் பெயரிட்டவர் தமிழரே. மலை வளம் சிறந்த அந் நாட்டுக்கு
மலைய நாடு என்னும் பெயர் மிகப் பொருத்த முடைய தன்றோ? அங்கு
மூவாறு என்பது ஓர் ஊரின் பெயர்.