தமிழகம் - அன்றும் இன்றும்375

      இன்னும், சாவக நாடும், அதன் தலைநகரமாகிய நாகபுரமும்
மணிமேகலைக் காவியத்தில் குறிக்கப்படுகின்றன5. தமிழ் நாடு தன்னரசு
பெற்றிருந்த போது கடல் சூழ்ந்த பல நாடுகளில் தமிழ்க் கொடி பறந்தது.
திக்கெல்லாம் புகழும் திருநாடாகத் தமிழகம் விளங்கிற்று.

           
  “சிங்களம் புட்பகம் சாவகம்-ஆதிய
              தீவு பலவினும் சென்றேறி-அங்குத்
              தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
              சால்புறக் கண்டவர் தாய்நாடு”


என்று அந் நாட்டைப் புகழ்ந்து மகிழ்ந்தார் பாரதியார்.

       இக் காலத்தில் தமிழன்னையின் திருமுடி யெனத் திகழ்வது
திருவேங்கடமலை. அம் மலையை “மாலவன் குன்றம்” என்பர்.

            
“நீலத் திரைகடல் ஓரத்திலே-நின்று
             நித்தம் தவஞ்செய் குமரியெல்லை - வட
             மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
             மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு”

என்று குறுகி நிற்கும் தமிழகத்தின் பெருமையைக் கூறிக் கவிஞர்
மகிழ்கின்றார்.

                  
அடிக் குறிப்பு

1. இசை நுணுக்கம் இயற்றிய சிகண்டியார் பாட்டு.
2. சிலப்பதிகாரம், காடு காண் காதை, 19 - 20.
3. Comparative Grammer of Dravidian Language Introduction. P.98.
4. சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை, 35 - 36.
5. மணிமேகலை, காதை 14, வரி 74.