குடியும் படையும் 63

குடி

     

   குடி என்னும் சொல் ஊர்ப் பெயர்களில் அமைந்து குடியிருப்பை
உணர்த்துவதாகும். உறவு முறையுடைய பல குடும்பத்தார் ஒரு குடியினராகக்
கருதப்படுவர். இத்தகைய குடியினர் சேர்ந்து வாழுமிடம் குடியிருப்பு என்றும்,
குடி என்றும் சொல்லப்படும். தஞ்சை நாட்டில் பேரளத்துக் கருகே சிறுகுடி

என்னும் ஊர் உள்ளது.7 இளையான் குடியிற் பிறந்த மாறன் என்ற
திருத்தொண்டர் இளையான்குடி
மாறன் என்று பெரிய புராணத்தில்
பேசப்படுகின்றார். மற்றொரு சிவனடியாராகிய
சிறுத்தொண்டர் பிறந்த ஊர்
செங்காட்டங்குடியாகும். இன்னும், தேவாரத்தில கற்குடி, கருங்குடி, விற்குடி,
வேள்விக்குடி முதலிய பல குடியிருப்புகள் பாடல் பெற்றுள்ளன. நெல்லை
நாட்டில் திருக்குறுங்குடி என்னும் வைணவத் திருப்பதி ஒன்று உண்டு.
திராவிட மொழி நூலின் தந்தையென்று புகழப்படுகின்ற கால்டுவெல் ஐயர்
ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அரும்பணி செய்த இடம் இடையன்குடியாகும்.
 

இருப்பு, இருக்கை

       இருப்பு, இருக்கை முதலிய சொற்களும், சிறுபான்மையாக
ஊர்ப்பெயர்களில் காணப்படுகின்றன. தஞ்சை நாட்டில், புன்னை இருப்பு,
வேட்டைக்காரன் இருப்பு முதலிய குடியிருப்புகள் உண்டு. தொண்டை
நாட்டில் உள்ள ஓரிக்கை என்னும் ஊரின் பெயர் ஓரிர விருக்கை என்பதன்
சிதைவென்று சொல்லப்படுகின்றது.8