70ஊரும் பேரும்

தலைக்காடு என்னும் ஊரும், ஆர்க்காட்டில் தலைவாய் நல்லூர் என்னும்
ஊரும் காணப்படுகின்றன.

     இடையென்னும் அடைமொழியைக் கொண்ட ஊர்களில் மிகப் பழமை
வாய்ந்தன திருவிடைமருதூர், திருவிடைச் சுரம், இடையாறு முதலியனவாம்.
இவை மூன்றும் தேவாரப் பாடல் பெற்றுள்ளன. இடைக்காடு என்ற ஊரிலே
பிறந்த புலவர் ஒருவர் இடைக்காடர் என்று பண்டை இலக்கியத்தில்
பேசப்படுகின்றார். அரிசில் ஆற்றுக்கும் திருமலைராயன் ஆற்றுக்கும்
இடையேயுள்ள ஊர், இடையாற்றங் குடி என்னும் பெயர் பெற்றுள்ளது.
இன்னும், இடையென்று பொருள்படுகின்ற நடு என்னும் சொல், நெல்லை
நாட்டிலுள்ள நடுவக்குறிச்சி, சோழ நாட்டிலுள்ள நடுக்காவேரி முதலிய
ஊர்களின் பெயரில் அமைந்திருக்கக் காணலாம்.

    இனி, கடையென்னும் அடையுள்ள ஊர்ப் பெயர்கள் சில உண்டு. சேலம்
நாட்டிலுள்ள கடைக் கோட்டூரும், தென் ஆர்க்காட்டிலுள்ள கடைவாய்ச்
சேரியும், நெல்லை நாட்டிலுள்ள கடையமும் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
 

பெரியதும் சிறியதும்

    பெருக்கமும் சுருக்கமும் சில ஊர்ப் பெயர்களிலே பொருந்தி நிற்கக்
காணலாம். கொங்கு நாட்டில் முற்காலத்தில் பெரியதோர் ஊராக விளங்கியது
பேரூர் ஆகும். தஞ்சை நாட்டிலுள்ள பேரளம் என்னும் ஊரும் திருச்சிராப்
பள்ளியைச் சேர்ந்த பெரும் புலியூரும பெரிய ஊர்களாக
இருந்திருக்கவேண்டுமென்று தெரிகின்றது. சிறிய ஊர்கள் சிற்றூர் என்று
பெயர் பெற்றன.