72ஊரும் பேரும்

இடையே அமைந்த குடியிருப்பு, செங்காட்டங்குடி என்று பெயர் பெற்றது
போலும். காவிரிப்பூம்பட்டினத்தின் அருகே தலைச் செங்கானம் என்னும்
பெயருடைய ஊர் உண்டு. தேவாரத்திலும் சங்க இலக்கியத்திலும் அவ்வூர்
குறிக்கப் படுகின்றது. செந்நிறத்தால் பெயர் பெற்ற குன்றுகளில் ஒன்று சேலம்
நாட்டிலுள்ள செங்குன்று. அச்சிகரத்தின் பெயராகிய திருச்செங்கோடு என்பது
இன்று ஊர்ப் பெயராக வழங்குகின்றது. சேர நாட்டில் செங்குன்று என்னும்
வைணவத் திருப்பதி நம்மாழ்வாரால் பாடப்பட்டுள்ளது. இந்நாளில் அது
செங்கன்னூர் என்னும் பெயரால் குறிக்கப்படுகின்றது. அருணாசலம் என்ற
வட சொல்லின் பொருள் செங்குன்றம் என்பதே யாகும். அருணாசலம்
திருவண்ணாமலையின் மறுபெயர். இன்னும், செங்குளம், செங்களக்குறிச்சி
முதலிய ஊர்ப் பெயர்கள் செம்மையின் அடியாகப் பிறந்தவை. அவ்வாறே
கருங்குளம், கருங்குழி, கார் குறிச்சி முதலிய ஊர்ப் பெயர்களில் கருமை
அமைந்திருக்கக் காணலாம்.

      நிலத்தின் நிறம் பற்றி எழுந்த ஊர்ப் பெயர்கள் பலவாகும். கருநிறம்
வாய்ந்த தரை கரிசல் எனப்படும். பாண்டி நாட்டில் சின்னக் கரிசல்,
குலையன் கரிசல் முதலிய ஊர்கள் உள்ளன. செந்நிறம் வாய்ந்த நிலம்
செவ்வல் என்று பெயர் பெறும். தென்னாட்டில் மேலச் செவல், கீழச் செவல்,
முள்ளிச் செவல் முதலிய ஊர்கள் உண்டு.16 வெண்மையின் அடியாகப்
பிறந்த ஊர்ப் பெயர்களும் உள்ளன.