கோட்டையைச் சுற்றி ஒரு சிற்றூர் எழுந்தது. அவ்வூர் பேரெயிலூர் என்று
பெயர் பெற்றது. இந்
நாளில் அப் பெயர் சிதைந்து பேரையூர் என
வழங்கின்றது,23
பாண்டி நாட்டில் கானப் பேரெயில் என்னும் பெருங்கோட்டை
இருந்தது. வேங்கை மார்பன் என்று
பெயர் பெற்ற வீரன் ஒருவன் அக்
கோட்டையின் தலைவனாக விளங்கினான். பாண்டியன் உக்கிரப்
பெருவழுதி
அவன் மீது படையெடுத்துச் சென்று கானக் கோட்டையைக் கைப்பற்றிய
செய்தி சங்க
இலக்கியங்களிற் கூறப்படுகின்றது. அவ் வெற்றியின் காரணமாக
அம் மன்னன் கானப் பேரெயில்
கடந்த உக்கிரப் பெருவழுதி என்னும்
உயரிய பட்டம் பெற்றான்.24
கானப் பேரெயிலுக்கு அணித்தாக ஏழெயில் என்னும் கோட்டை
ஒன்று இருந்ததாகத் தெரிகின்றது.
ஒருகால் அக்கோட்டையைக் கைப்பற்றிய
நலங்கிள்ளியென்ற சோழனை,
“தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை”
என்று கோவூர் கிழார் புகழ்ந்து பாடியுள்ளார். இராமநாதபுரத்துச் சிவகங்கை
வட்டத்தில் உள்ள
ஏழுபொன் கோட்டை என்ற ஊரே பழைய ஏழெயில்
என்பர்.
நெல்லை நாட்டில் ஆழ்வார் திருநகரிக்கு அருகே ஒரு பேரெயில்
இருந்ததாகத் தெரிகின்றது.
அக்கோட்டை நகரத்தில் திருமால் கோயில்
கொண்டருளினார். ஆதலால், அவ்வூர் திருப்பேரெயில்
என்று
அழைக்கப்பட்டது.25 |