6 | பெரியோர் வாழ்விலே | சேவகன் நேராகத் தாசில்தாருடைய அலுவலகத்திற்குச் சென்றான். அப்போது அங்கு முத்துசாமி என்ற ஒரு சிறுவன் மட்டுமே இருந்தான். வேறு யாரும் இல்லை. சேவகன் அவனிடம் செய்தியைச் சொன்னான். சொல்லிவிட்டு, “பெரியவர்கள் யாரும் வரவில்லையா?” என்று கேட்டான்.
“இல்லை. அதனால் என்ன? நான் வருகிறேன். வா. போகலாம்” என்று கூறித் துணிச்சலோடு தாசில்தாரிடம் வந்தான் முத்துசாமி.
தாசில்தார் முத்துசாமியை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார். பிறகு, சேவகனை நோக்கி, “என்னடா இது, இந்தப் பொடியனை அழைத்து வந்திருக்கிறாயே! வேறு யாரும் இல்லையா?...” என்று சலிப்போடு கூறிவிட்டு, முத்துசாமியைப் பார்த்து, “சரி. சரி. ஏனப்பா, உனக்கு அந்த உடைப்பைப் பற்றி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.
“நீங்கள் உத்தரவு கொடுத்தால், உடனேயே நான் அங்கே போய், விவரம் அறிந்து வருகிறேன்” என்றான் முத்துசாமி.
“சரி, போய் வா” என்று அரை மனத்துடன் அவனை அனுப்பி வைத்தார் தாசில்தார்.
முத்துசாமி உடைப்பு எடுத்த இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்தான். வந்தவன் கையில் ஒரு தாள் இருந்தது. அதைத் தாசில்தாரிடம் கொடுத்தான். அதை அவர் உற்றுப் பார்த்தார். |
|
|
|
|