பக்கம் எண் :

380கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் 64

கோளரியை எதிர்க்கவந்த கவச வீரன்
கூர்வேலால் தாக்குண்டு தரையிற் சாய்ந்தான்.

‘வெண்ணகரில் செயல்வீரம் குறைந்த தேனும்
      விளம்புகிற சொல்வீரங் குறைய வில்லை;
திண்ணியனாம் வெண்கோடன் வந்து நேற்றுச்
      சிறையகத்து வதிகின்றான் அமரில் தோற்று;
பெண்ணனையான் இவன்வந்து வீரம் இன்று
      பேசுகின்றான் வாய்கிழிய என்முன் நின்று;
நண்ணிவரும் மானொன்று புலியின் முன்னே
      நாடகங்கள் ஆடுவதைப் பாராய் இன்னே! 294

என்பரியைக் கொணர்க’வென ஏறிக் கொண்டான்
      ஏறனைய கோளரியன்; கோட்டை வீரன்,
முன்பழியைத் தீர்ப்பதற்கே ஈண்டு வந்தேன்;
      முனைத்துவரும் என்பகழிக் கெதிரில் நிற்கத்
தென்புனது நெஞ்சகத்து நிலைத்து நின்றால்
      தெரிகணையை எதிர்தாங்கஃ தில்லை என்றால்
பின்புறவே ஓடிவிடு! எனப்பு கன்று
      பெரும்பகழி பலதொடுத்தான் நாணிற் பூட்டி.295

கார்முகத்தின் தாரையெனக் கனன்று சிந்தும்
      கார்முகத்தின் அம்புகளைத் தடுத்துத் தாங்க
ஏர்முகத்தன் தடுமாறிக் குனிந்தும் சாய்ந்தும்
      இடையிடையே உடல்வளைந்தும் சுழன்றும் நின்றான்;
ஓர்முகத்தும் இவ்விளவல் இன்றே போல
      உறுதுயரம் அடைந்ததிலை; எனினும் அன்னான்
போர்முகத்துச் சலிக்கவிலை; புலிபோல் நின்று
      பொருமுறையைப் புகழ்ந்தவனைப் பொருது நின்றான்296


பகழி - அம்பு கார்முகம் - 1 மழை 2வில். ஏர் - அழகு