| 132 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
தெங்கை விட்டுப் பிரியாது அணித்தே புடைசூழ்ந்து நிற்கங்கமுகின் உயர்வும், அவைகளுடன் நீக்கமின்றி வாழ்க்கைத் துணையெனச் சுற்றிச் சுற்றிப் பின்னிக்கிடக்குங்கான் பரந்த செடிகொடிகளின் ஈட்டமும், வானுலகேறப் பச்சைப் படாம் விரித்த படிகளெனத் திகழ்கின்றனவோ என்று ஐயுறலாம். புகைவண்டி அப் பசுமை நிலத்தில் பாய்ந்தோடுவதை நோக்குழி, அது பச்சை மரகத மலையைக் கிழத்தோடும் அம்பெனத் தோன்றுகிறது. பசுமைக்காட்சி யில்லாத இடனும் உண்டோ! கண்ணுக்கும் உளத்துக்கும் இனிமை யூட்டும் பசுமையின் பெற்றியை என்னென்றுரைப்பேன்! புகைவண்டியின் விரைவில், இடையிடை யோடுஞ் சிற்றருவி களின் தோற்றம், பசிய வானில் மின்னொளி தோன்றி மறைவது போலப் புலப்படுகிறது. பச்சைப் பசுங்கடலில் சிறு சிறு தீவுகள் நிலவுவதைமான, வரை வேய்ந்த சிறு சிறு குடில்கள் நிலவுகின்றன. அக் குடில்களின் நடுவண் அடவர் மகளிர் குழந்தைகள், காளை மயில் கன்றுகளென நிற்கின்றனர். அவ்விட்டமும், இக்கூட்டமும் இயற்கையோடியைந்த இன்பமாகப் பொலிகின்றன. ஆங்காங்கே, சிற்சில இடங்களில் இக்கால நாகரிகக் கட்டடங்களும் புலனா கின்றன. அவைகளைக் காணுந்தோறும் பொல்லா அரக்கர் குழுவைப் பார்ப்பது போன்ற நிகழ்ச்சி உள்ளத்துறாமற்போகாது. கூரை வேய்ந்த வீடுகள் இயற்கை யோடியைந்து இன்பூட்டுவது போலப் பெரும் பெரும் மாடிகள் இயற்கையோடியைந் திருப்பினும் இன்பூட்டுவதில்லை.” (இத் தமிழ்ப்பெரியாரின் வருணனைக் கட்டுரையை நினைவிற் கொண்டு, கீழ்க்காணும் பொருள்களில் வருணனைக் கட்டுரைகள் வரைந்து பழகுக.) (1) கடற்கரைக்காட்சி(2) மலைவளக் காட்சி (3) இயற்கைக் காட்சி (4) மாமல்லபுரச் சிற்பக் காட்சி (5) மலைக்கோட்டை (6) செஞ்சிக் கோட்டை (இற்றைய நிலை) (7) காவிரிப் பூம்பட்டினம் (பூம்புகார்) (8) மதுரை மீனாட்சியம்மன் கோயில். (9) நீ சென்ற கடற் செலவு (10) நீ கண்ட காட்சி (11) நீ பார்த்த ஒரு பயிர்த் தொழில் (12) தேன் சேகரிக்கப்படும் முறை (13) முழுநிலவுக் காட்சி (14) நீ கண்ட கொலுக்காட்சி (15) மேட்டூர் அணை. |