பக்கம் எண் :

பாடுங்குயில்கள்189

1. இசைக்குயில் வேதநாயகர்
(கி.பி. 1826 - 1889)

அ. இளமைப் பருவம்

நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்குத் தாழ்வு நேராத வண்ணம், ஒவ்வொரு நூற்றாண்டிலும் பெருமக்கள் பலர் தோன்றி, அதனைக் காத்து வந்துள்ளனர். அவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வள்ளல் இராமலிங்க அடிகள், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பாளையங் கோட்டைக் கிருட்டிணப் பிள்ளை, மாயூரம் வேத நாயகம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதியார் போன்ற பெருமக்கள் தோன்றிப் பல்லாற்றானும் தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளனர். இத் தமிழ்த் தொண்டர்களுள் வேதநாயகரின் விழுப்புகழை நாம் இங்கே காண்போம்.

பிறப்பு

‘சோழ நாடு சோறுடைத்து’ என்று சான்றோரால் பாராட்டப்பெற்றது சோழ நாடு. அவ்வாறு புகழப்பெறு வதற்குக் காரணம், அந் நாட்டில் காவிரியாறு பாய்வதனால் தான். என்றும் வற்றாமல் நீர் பாயும் தன்மை வாய்ந்தது அக் காவிரி. அது சங்கப் புலவர் பலராலும் பாராட்டப்பெற்றது; ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ என்று ஆழ்வாரால் வணங்கப் பட்டது. புனிதத்தன்மை வாய்ந்த அக் காவிரிக்கரையில் திரிசிரபுரம் என்னும் திருச்சிராப் பள்ளி அமைந்திருக்கின்றது. இப் பேரூருக்குத் தெற்கே பத்துக்கல் (16 கி. மீட்டர்) தொலைவில் குளத்தூர் என்னும் சிற்றூர் உளது.

குளத்தூரில் வேளாளர் குடும்பங்கள் பல இருந்தன. அவற்றுள் கொங்குராயர் குடி என்ற அரசியல் சிறப்புப்பெற்ற குடும்பம் ஒன்றும் வாழ்ந்தது. அக் குடியில் தோன்றிய மதுர நாயகம் பிள்ளை என்பவர் தமது ஐம்பதாவது வயதில் கிருத்துவ சமயத்தில் சேர்ந்தார்.