விசையொடுங்கிய தேகத்தில் வலிமை ஊட்டி, வீரமூட்டத் தக்கனவாக இருந்தன; எழுச்சியையும் உணர்ச்சியையும் உண்டாக்கும் வண்ணம் அமைந்தன. அப் பாடல்களைக் கேட்டு மக்கள் விழித் தெழுந்தனர்; வீறு கொண்டு நின்றனர்; உலகை நிமிர்ந்து நோக்கினர். புரட்சிக் கவிஞர் அடிமை மனப்பான்மையில், தாழ்வு மனப்பான்மையில் ஊறிக்கிடந்து, நம்மால் என்ன ஆகும் என்று தன்னம்பிக்கையிழந்து தவித்த மனிதனை நோக்கி, அவனுக்கு எழுச்சியூட்டக் கருதி, ‘மனிதரில் நீயும்ஓர் மனிதன்; மண்ணன்று; இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்; தோளை உயர்த்து; சுடர்முகம் தூக்கு; மீசையை முறுக்கி மேலே ஏற்று’ என்று பாடினார்; அப்பொழுதும் மக்கள் விழிப்புற்று எழும் நிலையைப் பெறாதிருந்ததைக் கண்டார்; இனி இவர்களிடம் சொல்லிப் பயனில்லை; இளைஞர் கூட்டத்துக்குத்தான் உணர்ச்சியை உண்டாக்க வேண்டும்; பழமையில் ஊறிப்போன நெஞ்சங்கள் திருந்தப்போவதில்லை’ என்று எண்ணினார்; அதனால், இளைஞர் கூட்டத்துக்கு வீரமுரசங்கொட்டினார். ‘பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது சிறுத்தையே வெளியில் வா ......................................................... சிம்புட் பறவையே சிறகை விரி; எழு; சிங்க இளைஞனே திருப்பு முகம்; திற விழி’ என்று எழுச்சிக் குரல் கொடுத்தார். நாடெங்கும் இளைஞர் படை திரண்டெழுந்தது. எங்கும் உணர்ச்சி! எங்கும் எழுச்சி! இவ்வாறு தமிழகமெங்கும் உணர்ச்சியும் எழுச்சியும் உண்டாகப் புரட்சிக் கருத்துகளைப் பாடி வந்தமையால் மக்கள், பாரதிதாசனைப் ‘புரட்சிக் கவிஞர்’ என்று வழங்கத் தொடங்கினர். எல்லாருடைய நெஞ்சங்களிலும் புரட்சிக் கருத்துகள் அரும்பு விட்டன. புரட்சிக் கவிஞரின் புகழும் மணக்கத் தொடங்கியது. |