256 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
எவரையும் அழைக்க விரும்பினால் அதைப் பயன் படுத்துவார். அடிக்கடி பயன்படுத்துவார். பலமுறை உரத்த குரல் கொடுத்து அழைக்க இயலாமையால் அதன் துணை அவர்க்கு இன்றியமையாதது. ஒரு முறை மணி யடித்தால் ஒருவர்; இரு முறையொலித்தால் மற்றொரு வர்; மூன்று முறையென்றால் மற்றொருவர் வருவர். இவ்வாறு பயிற்சியளித் திருந்தார். அம்மாளிகைக்குச் சுப்பிரமணிய பாரதி யார் வந்திருக் கிறார். நம் பாவேந்தரும் அடிக்கடி வருவதுண்டு. சண்முகனார் குடும்பத்துடன் ஒன்றிப் பழகும் நானும் அடிக்கடி செல்வதுண்டு. ஒரு நாள் நான் அங்குச் சென்றிருந்த பொழுது பாவேந்தரும் அங்கிருந்தார். இன்ப மாளிகையின் முகப்புப் பகுதியில் நீண்டு அகன்ற உயரமான பெரியகூடம் ஒன்றிருக்கும். நடுவில் மிகப் பெரிய ஊஞ்சலொன்று தொங்கும். சுவரில் எதிர் எதிராக மிகப் பெரிய நிலைக்கண்ணாடி பதிக்கப்பட்டிருக்கும். ஊஞ்சலில் ஆடும் பொழுது முழு உருவமும் அக்கண்ணாடிகளில் தெரியும். பாவேந்தர் அவ்வூஞ்சலில் அமர்ந்து மகிழ்ச்சியாக ஆடிக்கொண் டிருந்தார். நானும் உடன் வந்த தமிழண்ணலும் ஓரத்திலிருந்த பத்தியில் அமர்ந்து கொண்டோம். ஆடிக்கொண்டிருந்த பாவேந்தர், புகையிலைக் கற்றை யொன்றை எடுத்துத் தாமே சுருட்டிக் கொண்டிருந்தார். அதைக் கண்டு நாங்கள் வியப்புற்றோம். எதற்காகச் சுருட்டிக்கொண் டிருக்கிறார் என்பது விளங்கவில்லை. சிறிது நேரத்தில் அது சுருட்டாக உருவெடுத்தது. அதைப் பற்ற வைத்துக் கொண்டார். ஐயா, முன்பெல்லாம் சிகரெட் மட்டுந்தானே பிடிப்பீர்கள்? என்று வினவினேன். ‘ஆமப்பா, கடைசியா சார்மினார் சிகரெட்டுக் குடிச்சுக் கிட்டு இருந்தேன். குடிச்சுக் குடிச்சு அதிலே காட்டமே தெரியலே, சுருட்டு வாங்கிக் குடிச்சேன். அதிலேயும் காட்டம் இல்லாமல் போச்சு, இப்ப, புகையிலை வாங்கி நானே சுருட்டிக்கிறேன், என்றார். அளவிற்கு மேல் பயன்படுத்துவதால் காட்டம் குறைந்தது போல் அவருக்குத் தோன்றியிருக்கிறது. அவற்றில் காட்டம் எப்பொழுதும் போலவே இருக்கும். இவருக்குக் காட்டம் போதவில்லை அதனால் சுருட்டில் காரம் குறைந்து விட்டது என்று கூறுகிறார். பின்னர், திருக்குறள் பற்றிப் பேச்சு எழுந்தது. பல குறட் பாக்களுக்கு புதிய உரை கூறினார். சிலவற்றிற்கு மறுப்புரைத் தோம். |