| 306 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
அரசர் குலத்தை எல்லாம் அழித்துக்கொண்டு வந்த போது சோழ நாட்டுக்கும் வந்தான். அப்போது கன்னித் தெய்வம் (கொற்றவை) அரச பதவியை விட்டுச் சில காலம் எங்கேனும் போயிருக்கும்படி காந்தமனுக்கு யோசனை கூறிற்றாம். அந்த யோசனைப்படி காந்தமன் தன்னுடைய கணிகையின் மகனான சுகந்தன் என்பவனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுத்தான் திரும்பிவருமளவும் ஆட்சி செய்யுமாறு கூறிச் சென்று விட்டானாம். பரசுராமன் வந்தபோது அரச குலத்தவன் அல்லாத ஒருவன் ஆட்சி செய்வதைக் கண்டு சுகந்தனைக் கொல்லாமல் போய்விட்டானாம். பரசுராமன் போன பிறகு காந்தமன்திரும்பி வந்து சோழநாட்டை அரசாண்டானாம்.8 சுகந்தன் இவன் சோழர் குலத்து மன்னன் அல்லன். மேலே கூறப்பட்ட காந்தமன் என்னும் சோழனுடைய காதற் கணிகையின் மகன். மேலே கூறப்பட்ட காரணத்தினாலே இவன் சோழ நாட்டைச் சில காலம் அரசாண்டான். இவன் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து அரசாட்சி செய்தபோது இரண்டு நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. இவ்வரசனுடைய இளைய மகன், காவிரியாற்றில் நீராடி வீடு திரும்பிச் சென்ற மருதி என்பவளைக் கண்டு அவளைத் தன்னுடன் வரும்படி அழைத்தான். அவள் மனம் நொந்து பூதசதுக்கத்தில் உள்ள காவல் பூதத்தின் கோயிலில் சென்று சுகந்தன் மகனுடைய தகாத செயலைக் கூறி முறையிட்டாள். அதற்கு அந்தப் பூதம், ‘அரசன் இந்தக் குற்றத்துக்குத் தண்டனை கொடுக்கா விட்டால், பிறகு நான் முறை செய்வேன்; நீ உன் இல்லத்துக்குப் போ’ என்று கூறிற்று. பிறகு சுகந்த அரசன் தன்னுடைய மகன் செய்த தகாத செயலையறிந்து விசாரித்துத் தன் மகனை வாளினால் வெட்டி விட்டான். இதனை மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது.9 இது நடந்த பிறகு சில காலம் கழித்துச் சுகந்தனுடைய மூத்த மகன் தன்னுடைய தம்பியின் மரணத்துக்குக் காரணமாயிருந்த அந்த மருதி வீதிவழியே சென்றபோது, தன்னுடைய குடுமியில் சூடியிருந்த பூமாலையை எடுத்து அவள் கழுத்தில் இடுவதற்குக் கையை அவன் உயர்த்திய போது, அந்தக் கை உயர்த்தியபடியே (தாழாமல் நின்று விட்டது) தன்னுடைய மகன் செய்யக் கருதிய தகாத செயலை அறிந்த
8. மணிமே. 4 : 25 - 28 9. ௸ 22 : 40 - 79 |