9. விளைபொருளும் உற்பத்திப் பொருளும் வெல்லமும் சர்க்கரையும் சங்க காலத்தில் வெல்லமும் சர்க்கரையும் செய்யப்பட்டன. வெல்லமும் சர்க்கரையும் செய்வதற்குக் கரும்பு வேண்டும். கரும்பும் பயிர் செய்யப்பட்டது. ஆகவே அக்காலத்தில் கரும்பும் வெல்லமும் முக்கியமான விவசாயப் பொருளும் உற்பத்திப் பொருளுமாக இருந்தன. கொங்கு நாட்டில் தகடூர் வட்டாரத்தை யரசாண்ட அதியமான் அரச பரம்பரையில் வெகு காலத்துக்கு முன்பு இருந்த ஒருவன் தேவலோகத்திலிருந்து கரும்பைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் பயிர் செய்தான் என்று கூறப்படுகின்றான். ‘அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் நீரக இருக்கை ஆழி சூட்டிய தொன்னிலை மரபின் முன்னோர்’ (புறம். 99 : 1-4) என்றும், ‘அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே’ (புறம். 392 : 20-21) என்றும் ஒளவையார் கூறுவதிலிருந்து இதனை அறிகின்றோம். இதனால் கொங்கு நாட்டு அதியமான் அரசன் ஒருவன் ஏதோ தூர தேசத்திலிருந்து கரும்பைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் முதல் முதலாகப் பயிர் செய்தான் என்று தெரிகின்றது. தமிழ் நாடெங்கும் கரும்புப் பயிர் செய்யப்பட்ட இடம் கரும்பின் பாத்தி என்று கரும்பின் கழனி என்றும் கூறப்பட்டது. கரும்பைப் பழன வெதிர் என்று ஒரு புலவர் கூறியுள்ளார். (பழனம் - கழனி. வெதிர் - மூங்கில். மூங்கில் மலைகளில் தானாகவே வளர்வது. கரும்பு, கழனியில் பயிர் செய்யப்படுவது. மூங்கிலைப் போலவே கரும்பும் கணு உள்ளது. ஆகையால் கழனிகளில் பயிர் செய்யப்படுகிற மூங்கில் என்று கரும்பு கூறப்பட்டது) கரும்பு தமிழ்நாடு எங்கும் பயிரிடப்பட்டது. |