12. வஞ்சிக் கருவூர் சங்க காலச் சேரநாட்டின் தலைநகரம்* சங்க காலத்துச் சேரநாடு தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தச் சேரநாட்டின் தலைநகரம் வஞ்சிமாநகர் என்று பெயர் பெற்றி ருந்தது. வஞ்சி நகரத்துக்குக் கருவூர் என்று இன்னொரு பெயரும் வழங்கியது. வஞ்சிக் கருவூர் சேரநாட்டிலே மேற்குக் கடற்கரை ஓரத்தில் சுள்ளியாற்றின் கரைமேல் இருந்தது. அந்தக் காலத்திலேயே கொங்கு நாட்டின் தலைநகரமும் வஞ்சி என்றும் கருவூர் என்றும் பெயர் பெற்றிருந்தது. பிளைனி என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் ஒரு கருவூரைக் குறிப்பிடுகிறார். அந்தக் கருவூரை அவர் கரவ்ரா என்று கூறுகிறார். அந்தக் கருவூர் கடற்கரைக்கு அப்பால் உள்நாட்டிலே இருந்தது என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறுகிற கருவூர், கொங்கு நாட்டுக் கருவூராகும். கொங்கு நாட்டுக் கருவூர் இப்போது திருச்சிராப் பள்ளி மாவட்டத்தில் கரூர் என்று பெயர் பெற்றிருக்கிறது. பிளைனி கூறுகிற கருவூர் ஒருவேளை சேர நாட்டுக் கருவூராகவும் இருக்கக் கூடும். எப்படியென்றால், சேரநாட்டுக் கருவூர் முசிறித் துறைமுகத் துக்குக் கிழக்கே சிறிது தூரத்தில் உள்நாட்டில் இருந்தது. ஆகையால், பிளைனி கூறுகிற கரவ்ரா என்னும் கருவூர் சேரநாட்டுக் கருவூரா அல்லது கொங்கு நாட்டுக் கருவூரா என்பதை அறுதியிட்டுக் கூற முடிய வில்லை. கருவூர் என்னும் பெயரோடு இரண்டு ஊர்கள், சேர நாட்டில் ஒன்றும், கொங்கு நாட்டில் ஒன்றும் இருந்தன. இரண்டு கருவூர்கள் இருந்தன என்பதையறியாமல், சில ஆண்டுகளுக்கு முன்பு சில அறிஞர்கள் இதுபற்றி ஆராய்ந்தார்கள். அவர்களில் சிலர், கொங்கு நாட்டில் உள்ள கரூரே, சேர நாட்டின் தலைநகரம் என்று கூறினார்கள். வேறு சிலர், சேரநாட்டுத் தலைநகரமான கருவூர் சேர நாட்டிலே மேற்குக் கடற்கரையையடுத்து இருந்தது என்று கூறினார்கள். ‘ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’ என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதின திரு. கனகசபைப்பிள்ளை, வஞ்சிக் கருவூர் சேரநாட்டில் இருந்தது என்று அந்நூலில் எழுதினார். வேறு சில அறிஞர்களும் அவ்வாறே கருதினார்கள். கொங்கு நாட்டுக்
* தமிழியல் – Journal of Tamil Studies. 9 : 1976. |