1. சங்க கால மக்கள் வாழ்க்கை சங்க காலத்து வாணிகத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலத்து மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதையும் அறிய வேண்டும். சங்க காலம் என்பது கடைச் சங்க காலம். அது கி.பி. 250-க்கு முற்பட்ட காலம். இக்காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அக்காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடு உண்டு. இப்போதுள்ள நாகரிகம் அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் எல்லா நாடுகளிலும் மனித வாழ்க்கையும் நாகரிகமும், மட்ட மாகவும் தாழ்ந்த நிலையிலும் இருந்தன. வாழ்ந்த இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கபடி அவர்களுடைய நாகரிக மும், வாழ்க்கையும் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்தன. அவர்கள் வாழ்ந்த இடங்களும் சூழ்நிலைகளும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு வகையாக இருந்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை வெவ்வேறு விதமாகத் துன்பமாக அல்லது எளிதாக இருந்தது. அந்தக் காலத்தில் மனிதர் எந்தெந்த இடங்களில் எவ்வெப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன. நிலத்தினுடைய இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்கள் வாழ்க்கை ஐந்துவிதமாக அமைந் திருந்தது. குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம், பாலை நிலம் என்னும் நிலப் பிரிவுப்படி அவர்களுடைய வாழ்க்கையும் ஐந்து வகையாக இருந்தது. மலையும் குன்றுகளும் உள்ள இடங்கள் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெற்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. மலைகளின் மேலும் மலைச் சாரல்களிலும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். மலைகளுக்குக் கீழே இருந்த காடுகளும், காடு சார்ந்த இடங்களும் முல்லைநிலம் என்று பெயர்பெற்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மலைகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைவிட வேறுவிதமாக இருந்தது. ஆறுகள் பாய்கிறதும் அல்லது ஏரி குளங்கள் உள்ளதுமான சமவெளிகள் மருதம் என்று பெயர் பெற்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மற்றவர்களுடைய வாழ்க்கையைவிட மேலானதாக இருந்தது. கடற்கரையோரமாக இருந்த நிலங்கள் நெய்தல் நிலம் என்று |