பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 235 |
தொடு (கௌந்தியடிகளும் கோவலனும் கண்ணகியும்) புக்கா ரென்க” என்பது அடியார்க்கு நல்லார் உரை. இதனால், உறையூரில் கோழி யொன்று யானையும் போரிட்டு வெற்றிகொண்டதனால் அவ்வூருக்குக் கோழியூர் என்று பெயர் ஏற்பட்டதென்று தெரிகிறது. “வைகறை யாமத்து வாரணங் கழிந்து” என்று சிலப்பதிகாரம், காடுகாண் காதையில் வருகிறது. இதற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், “கோழியூரை வைகறை யாமத்தே கழிந்து. வாரணம்-கோழியூர்” என்று எழுதியிருப்பது காண்க. நீலகேசி என்னும் சமண சமய மூதாட்டியார், உறையூரிலிருந்து சமதண்டம் என்னும் ஊருக்குச் சென்றதாக நீலகேசி என்னும் நூல் கூறுகிறது. அவ்வாறு கூறும்போது, உறையூரைக் குக்குடமாநகர் (அசீவகவாதச் சருக்கம், 8) என்று கூறுகிறது. உறையூரின் நீதிமன்றம் நேர்மைக்கும் முறைமைக்கும் பேர்பெற்றது என்று சங்க நூல்கள் கூறுகின்றன: “அறங்கெழு நல்லவை யுறந்தை” “மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து அறநின்று நிலையிற் றாகலின், அதனால் முறைமை நின் புகழும் அன்றே ... .. ... ..” (புறம், 39) “மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து அறம் நின்று நிலைபெற்றதாதலால், முறைமை செய்தல் நினக்குப் புகழும் அல்லவே” என்பது இதன் பழைய உரை. “நீயே, அறந்துஞ் சுறந்தைப் பொருநனை” (புறம், 58) “நீ அறந் தங்கும் உறையூரின்கண் அரசன்” என்பது இதன் பழைய உரை. “மறந்கெழு சோழர் உறந்தை யவையத்து அறங்கெட அறியா தாங்கு ... .. ... ..” (நற்றிணை, 400) இவையும் உறையூரின் நீதிமன்றத்தின் சிறப்பைக் கூறுகின்றன. உறையூர் பண்டைக் காலத்தில் புகழ்பெற்றிருந்தது என்பதை, “செல்லா நல்லிசை உறந்தை” (புறம்., 395) என்றும், “கெடலரு நல்லிசை உறந்தை” (அகம்., 369) என்றும் வருவதனால் அறியலாம். |