15. பண்டைத் தமிழகத்தின் வடவெல்லை* பண்டைத் தமிழகத்தின் வடவெல்லையைக் குறிக்கும் போதெல் லாம் நெடியோன் குன்றமாகிய வேங்கடமலையை மட்டுமே பண்டை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளனர். ‘வடவேங்கடந் தென்குமரி, ஆயிடைத், தமிழ்கூறு நல்லுலகம்’ என்று கூறிப்போந்தது தொல்காப்பிய சிறப்புப் பாயிரம். “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புன னாட்டு” (சிலப்., வேனிற்காதை) என்றும், “குமரி வேங்கடம் குணகுட கடலா மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பில்” (சிலப்., வஞ்சி, கட்டுரை) என்றும் இளங்கோவடிகள் கூறியுள்ளார். பிற்காலத்து நன்னூலாரும், “குணகுடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள்” என்று வேங்கடமலையினையே வடவெல்லையாகக் கூறியிருக்கின்றார். இங்கு நாம் ஆராயப்புகுவது நன்னூலார் கூறிய தமிழ்நாட்டு எல்லையைப் பற்றி அன்று; இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுக்கு முற்பட்ட, அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த தமிழ் நாட்டில் வடவெல்லையைப் பற்றியே இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றது. திருவேங்கடமலை தமிழ் நாட்டின் வடவெல்லையாக இருந்த தென்பதில் சற்றும் ஐயமில்லை. ஏனென்றால், பண்டை ஆசிரியர் அனைவரும் வடவெல்லையாகக் கூறியுள்ளனர். திருவேங்கட மலைக்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்டது என்பதை, “பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்தர்” (அகம்., 211)
*மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை. |