16. சிறுபாணன் சென்ற பெருவழி** சிறுபாணாற்றுப் படை என்பது பத்துப்பாட்டில் ஒரு பாட்டு. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், நல்லியக்கோடன் என்னும் வள்ளலைப் பாடியது சிறுபாணாற்றறுப் படை. இதில் நல்லியக் கோடனிடம் சென்று பரிசு பெறும்படி நத்தத்தனார் ஒரு பாணனை ஆற்றுப்படுத்துகிறார். (ஆறு = வழி. ஆற்றுப்படுத்தல் = வழிகூறுதல்.) சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனாகிய நல்லியக் கோடன், ஓய்மா நாட்டின் அரசன். எயிற்பட்டினம், மாவிலங்கை, கிடங்கில் முதலிய ஊர்கள், இவனுக்கு உரியன. ஆகவே, எயிற்பட்டின நாடன், மாவிலங்கை மன்னன், கிடங்கிற்கோமான் என்று போற்றப் படுகிறான். ஓவியர் குலத்தில் பிறந்தவனாகலின் ஓவியர் பெருமகன் என்றும் கூறப்படுகிறான். “தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை மன்னருள்ளும் மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள் உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்” என்றும் (சிறுபாண். 120-122) “இழுமென ஒலிக்கும் புனலம் புதவிற் பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன்” என்றும் (புறம். 176) புகழப்படுகிறான். நல்லூர் நத்தத்தனார், நல்லியக்கோடனுடைய தலைநகரமான கிடங்கில் என்னும் ஊருக்குச் சிறுபாணனை ஆற்றுப் படுத்திய வழியை ஆராய்ந்து படம் வரைந்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். சிறுபாணன், கிடங்கிலை நோக்கிச் சென்ற பெருவழியின் இடையிலே எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்னும் ஊர்கள் இருந்தன.
** Tamil Culture. Vol. IX, 1961. Jan-March. |