பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு269

125 முதல் 180 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். இதில் இவனுடைய இளவரசுக் காலமும் சேர்ந்தது.

செங்குட்டுவனுடைய தந்தையான நெடுஞ்சேரலாதன் ஐம்பத் தெட்டு ஆண்டு அரசாண்டான். ஆகையால் அவன் ஏறத்தாழ கி.பி. 72 முதல் 130 வரையில் அரசாண்டிருக்கலாம். நெடுஞ்சேரலாதனுக்குப் பெண் கொடுத்த மாமனாகிய வேள் ஆவிக்கோ பதுமன் அவனைவிட மூத்தவனான படியால் அவன் ஏறத்தாழ கி.பி. 20 முதல் 80 வரையிலும் வாழ்ந்தவனாதல் வேண்டும் என்று கருதலாம். ஆகவே வேள் ஆவிக்கோ பதுமன் கி.பி. முதல் நூற்றாண்டிலும், அவனுடைய மருமகனான நெடுஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்து இரண்டாம் நூற்றாண்டின் முற்பாதி வரையிலும், அவன் மகனான சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண் டிலும் வாழ்ந்தவர்கள் எனக் கருதலாம்.

வையாவிக்கோ மன்னர்களைப் பற்றி இவ்வளவுதான் சங்க நூல்களிலிருந்து தெரிகின்றன. அவர்கள், சங்க காலத்தில் கொங்கு நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்திருந்த வையாவி நாட்டை அரசாண் டார்கள் என்றும் சேர அரசரோடும் கொங்குச் சேரரோடும் உறவு கொண்டிருந்தனர் என்றும் தெரிகின்றனர். சங்க காலத்துக்குப் பிறகு வையாவி நாடும் பொதினி நகரமும் பாண்டியர் ஆட்சிக்குட் பட்டுப் பாண்டிய நாட்டோடு இணைந்துவிட்டது. கடைச்சங்க காலத்தில் பொதினி என்று பெயர் பெற்றிருந்த நகரம் இப்போது பழனி என்று புகழ்பெற்று விளங் குகிறது. இந்த வரலாறுகளைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம்.