பக்கம் எண் :

106மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 10

ஆற்றுக்கு அருகிலே தங்கியிருந்தார். அவர் அங்குச் சில காலம் வரையில் அப்பிரணத்தியானம் என்னும் மூச்சை நிறுத்தும் யோகத்தைச் செய்து கொண்டிருந்தார். உணவு கொள்ளாமலே அப்பிரணத்தியானத்தைக் கடுமையாகச் செய்து கொண்டிருந்த படியினாலே, சித்தார்த்தத் துறவிக்கு உடம்பு சுருங்கி வற்றிப் போயிற்று. அதனால் அவர் பெரிதும் துன்பப்பட்டார். ஆகவே, அந்த யோகத்தை நிறுத்திவிட்டார். அவர் உடம்பு மிகவும் இளைத்துக் களைப்படைந் திருந்தது. ஆனால், அன்று வைகாசித் திங்கள் வெள்ளுவா நாளில், தாம் புத்த ஞானம் அடைந்து புத்தராகப் போவதை அவர் அறிந்திருந்தார். அன்று காலை, புத்தராகப் போகிற சித்தார்த்தர், காலைக்கடனை முடித்துக்கொண்டு தற்செயலாக அஜபால ஆலமரத்துக்குச் சென்று அதன் கீழே அமர்ந்து தமக்குப் புத்த ஞானம் கிடைக்கப் போவதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

முற்பகல் வேளை, பாயசத்தைப் படைக்க சுஜாதை தன் தோழி களுடன் ஆலமரத்துக்கு வந்தாள். அந்த மரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர் முகத்தில் ஒருவிதத் தெய்விக ஒளி தோன்றிற்று. அமைதியுள்ள சாந்தமூர்த்தியாகக் காணப்பட்டார். மனித இயல்பைக் கடந்த தெய்விக புருஷனாகத் தோன்றினார். இவரைக் கண்ட சுஜாதை, அவரை ஆலமரத்தில் குடியிருக்கும் தெய்வம் என்று கருதினாள். தான் படைக்கப் போகும் பால் பாயசத்தை ஏற்றுக் கொள்வற்காக அந்தத் தேவதை அங்கு எழுந்தருளியிருப்பதாக நம்பினாள். தோழிகளுடன் அருகில் சென்று பாயசப் பாத்திரத்தை அவர் எதிரில் வைத்து வணங்கினாள். பிறகு மூன்று முறை அவரைச் சுற்றி வலம் வந்தாள். “சுவாமி! இதைத் தங்களுக்கு அளிக்கிறேன். அருள் கூர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வேண்டிப் பின் தன் தோழிகளுடன் கிராமத்திற்குப் போய்விட்டாள்.

சித்தார்த்தருக்கு நல்ல பசி. அவர் சுஜாதை அளித்த பாயசப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நேரஞ்சர ஆற்றங் கரைக்குச் சென்றார். அங்கு சுப்ரதிட்டை என்னும் துறையில் ஒரு மரத்தடியில் பாத்திரத்தை வைத்துவிட்டு, துறையில் இறங்கி நீராடினார். பிறகு கரைக்கு வந்து மரத்தின் நிழலிலே அமர்ந்து சுஜாதை கொடுத்த பால் பாயசத்தைச் சாப்பிட்டார்.

இது, சித்தார்த்தர் புத்தராவதற்கு முன்பு, அன்று பகலில் உட்கொண்ட இனிய பால் பாயசம்.