பக்கம் எண் :

  

3. ஊர்வசியின் காதல்

மண்ணுலகத்தின் அரசனான புரூரவசுவும் விண்ணுலகத்தின் அரசனான தேவேந்திரனும் நண்பர்களாக இருந்தார்கள். நட்புக் காரணமாகப் புரூரவசு அடிக்கடி மண்ணுலகத்தைவிட்டுப் புறப்பட்டு ஆகாய வழியே விண்ணுலகத்துக்குப் போய் வருவது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு நாள் புரூரவசு விண்ணில் பிரயாணஞ் செய்து கொண்டருந்தபோது கேசி என்னும் அசுரன் ஆகாய வழியே பிரயாணஞ் செய்வதைக் கண்டான். ஊர்வசி, சித்திரலேகை ஆகிய இரண்டு தேவ கன்னியரை அவன் தேரில் ஏற்றிக்கொண்டு போனான். அந்தத் தெய்வப் பெண்கள் அச்சத்தினால் அழுது புலம்பித் தங்களை விட்டுவிடும்படி கேசியைக் கெஞ்சிக் கேட்டார்கள். கேசி அவர்களை விடாமல் பலாத்காரமாகத் தேரில் ஏற்றிக்கொண்டு போனான்.

ஊர்வசி தேவேந்திரனுடைய சபையில் ஆடல் பாடல் செய்பவள். சித்திரலேகையும் தேவ கன்னிகை. அதனைக் கண்ட புரூரவசு அரசன் அந்தத் தெய்வக்கன்னியர் மேல் இரக்கங்கொண்டு அவர்களை விடுவிக்க எண்ணினான். தன்னுடைய தேரைக் கேசியின் அருகில் செலுத்தி அவனுடன் போர் செய்தான். கேசியும் பின் வாங்காமல் புரூரவசுவுடன் போர் செய்தான். இருவருக்குங் கடும் போர் நடந்தது. போரின் கடுமையைக் கண்டு தேவகன்னியர் என்ன ஆகுமோ என்று அஞ்சி நடுங்கினார்கள். போரிலே புரூரவசு அரசன், கேசி அசுரனைக் கொன்று வெற்றி யடைந்தான். அசுரனுடைய தேரில் இருந்த ஊர்வசியையும் சித்திரலேகையையும் விடுவித்து அவர்களைத் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு தேவலோகத்துக்குக் கொண்டு போய் இந்திரனிடஞ் சேர்த்தான்.

புரூரவசுவின் இந்தச் செயலைத் தேவேந்திரன் மெச்சிப் புகழ்ந்தான். ஏனென்றால், கேசி என்னும் அசுரன் தேவேந்திரனுடைய பகைவன். புரூரவசு அவனைக் கொன்றதற்காகவும் தேவ கன்னியரைச் சிறை மீட்டுக் கொண்டு வந்ததற்காகவும் இந்திரன் மகிழ்ந்து அவனுக்கு வரங்களை வழங்கினான். புரூரவசுவுக்கு மேன்மேலும் திருஷம் ஆற்றலும் பேரும்புகழும் வளரவேண்டுமென்று தேவேந்திரன் வாழ்த்தினான்.