பக்கம் எண் :

172மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 10

அதைப்பாடின ஆள் யார் என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டாள். “எனக்குத் தெரியாது. மகாராணி! தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்” என்று விடை சொன்னாள் குணவதி.

“கண்டுபிடித்து வந்துச் சொல்லு. அந்த ஆளை நான் காண வேண்டும். ஒருவருக்குந் தெரியாமல் அழைத்துக்கொண்டு வா. யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது. இது உன் வரையில் இருக்கட்டும்” என்று கட்டளையிட்டாள் இராணி.

இராணியின் விபரீதமான தகாத எண்ணத்தை ஊழியப் பெண் குணவதி தெரிந்துகொண்டாள். இராணியின் எண்ணத்தைத் தடுக்க முயன்றாள். “தேவி! தாங்கள் உறக்கத்தில் கண்ட கனவை நனவாகக் கருதிக்கொண்டீர்கள் என்று தோன்றுகிறது. இந்த எண்ணத்தை விட்டு விடுங்கள். இது வெறுங்கனவு” என்று குணவதி பணிவாகத் கூறினாள்.

“இல்லையடி, இல்லை. நான் கனவு காணவில்லை. நனவு தான். நீ போய் அந்த ஆளைக் கண்டுபிடித்து என்னுடைய மனக் கருத்தைத் தெரிவித்து என்னைச் சந்திக்கச் சொல்லு விரைவாக போ” என்று கட்டளையிட்டாள்.

அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் குணவதி இசை பாடினவனைத் தேடிக்கொண்டு போனாள். அவளுடைய மனத்தில் பல எண்ணங்கள் தோன்றின. ‘நள்ளிரவில் இசை பாடினவன் அரண்மனை ஊழியனாகத்தான் இருக்கவேண்டும்’ அரசி உறங்கும் மாளிகைக்கு அருகில் இருப்பது யானைப்பந்தி ஆகையால், யானைப் பந்தியி லிருந்துதான் அந்த இசைப் பாட்டு வந்திருக்க வேண்டும். அதைப் பாடினவன் யானைப் பந்தியின் ஊழியனாக இருக்கவேண்டும். அவ்வளவு இனிமையாகப் பாடினவன் உருவத்திலும் அழகிலும் மன்மதனாக இருப்பானோ? போய்ப் பார்ப்போம்.’ என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டே குணவதி யானைப் பந்திக்குச் சென்றாள். குணவதி கருதியது போலவே அந்த ஆண் யானைப் பந்தியில் இருந்தான். அவனைக் கண்டதும் அவள் திடுக்கிட்டாள். அவள் கருதியதுபோல் அவன் மன்மதனாக அழகனாக இல்லை. அவன், அருவெறுக்கத்தக்க குரூபியாக இருந்தான்.

அவனுடைய விகாரமான உருவம் அருவெறுக்கத்தக்கதாக இருந்தது. பேய் போன்ற உருவம், நரம்புகள் உடம்பில் அங்கங்கே முடிச்சுப் போட்டதுபோல கட்டிக்கொண்டிருந்தன. வற்றிப் போன சிறிய