பக்கம் எண் :

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்183

பண்ணோசையைக் கேட்டுக் காட்டிலிருந்த யானைகளும் மான் மரை முதலான விலங்குகளும் பறவைகளும் கூட்டமாக வந்து செவி மடுத்துக் கேட்டு மகிழ்ந்து செயலற்று இருந்தன.

வழக்கம் போல ஒரு நாள் உதயண குமரன் காட்டுக்குச் சென்றான். நெடுந்தூரஞ் சென்றபோது யானை மந்தை ஒன்றைக் கண்டான். அந்த மந்தைகளின் நடுவே ஒரு களிற்று யானை நிற்பதைக் கண்டான். அழகாகவும் உயரமாகவும் கம்பீரமாகவும் இருந்த அந்தக் களிற்றை வசப்படுத்திப் பழக்கித் தன்னிடம் வைத்துக்கொள்ள எண்ணினான். அவன், அருகிலிருந்த ஒரு பாறைக் கல்லின்மேல் அமர்ந்து கோடபதி யாழை இசைத்து வாசித்தான். யாழின் இசை ஒலி காட்டில் பரந்து இசைத்தது. யாழின் இன்னிசையைக் கேட்ட யானை மெல்ல அவனருகில் வந்து நின்று இசையைச் செவிமடுத்துக் கேட்டுக்கொண்டு நின்றது. அது யாழிசையில் சொக்கிவிட்டது. நெடுநேரம் மெய் மறந்து இசையைக் கேட்டுக்கொண்டு நின்றது. கடைசியில், அவனுடைய யாழிசையில் ஈடுபட்டு அவனுக்கு அடங்கி விட்டது. யானை தனக்கு இசைந்துவிட்டதைக் கண்ட உதயணன் அதன் மேல் ஏறியமர்ந்து அதைத் தானிருந்த ஆசிரமத்துக்குச் செலுத்திக்கொண்டு போனான்.

அன்று முதல் அந்தக் களிறு உதயணனுக்கு ஊழியஞ் செய்து வந்தது. அவன் அதன் மேல் ஏறிக்கொண்டு காடுகளில் சுற்றித் திரிந்தான். அவன் நாள்தோறும் யாழ் வாசிக்கும் போதெல்லாம் அந்த யானை அங்கு வந்து இசையைக் கேட்டுப் பரவசமடைந்தது. ஒரு நாள் உதயணன் உறங்கிக்கொண்டிருந்த போது அவனுடைய கனவில் யானை தோன்றி அவனிடம் இந்தச் செய்தியைக் கூறிற்று: “நான் உன்னுடைய ஊழியன் ஆனேன். உன்னைவிட்டுப் பிரியமாட்டேன் ஆனால், நீ எனக்கு மூன்று வாக்குத் தரவேண்டும். அவை: ‘உன்னைத் தவிர என் மேல் வேறு யாரும் ஏறுவது கூடாது. என் கால்களைத் தோல் கயிறினால் கட்டக்கூடாது. நான் உணவு கொள்வதற்கு முன்பு நீ உணவு