தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் | 223 |
ஆகவே, “பாடினி இசை வென்றாள்; விறலி தோற்றாள்” என்று உண்மையான தீர்ப்புக் கூறினான். சபையோர் எல்லோரும் சம்மதித்து மகிழ்ச்சியாரவாரஞ் செய்தார்கள். பிறகு, வென்றவர் தோற்றவரின் தோளின் மேல் ஏற வேண்டும் என்னும் தீர்மானப்படி இசை வென்ற பாடினியைத் தோற்ற விறலியின் தோள் மேல் ஏறி அமரச் செய்தார்கள். பின்னர் பாண்டியன் பாடினிக்குப் பட்டு, பொன், பொருள் முதலியவைகளைக் கொடுத்துப் பாடினியைச் சிறப்புச் செய்தான். பாடினியை இழிவுபடுத்தி அவமானம் செய்ய எண்ணிய அவனுடைய எண்ணம் நிறைவேறவில்லை. அதற்கு மாறாகப் பேரும் புகழும் சிறப்பும் பாடினிக்கு உண்டாயிற்று. பிறகு பாடினி நெடுங்காலம் பாண்டியன் அரண்மனையில் இசைவாணியாக இருந்தாள். இவளுடைய இசைக் கலையை உலகம் புகழ்ந்து பேசிற்று. (இந்த வரலாற்றைப் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத் திலும், பெரும்பற்றப் புலியூர் திருவிளையாடற் புராணத்திலும் காணலாம்) அடிக்குறிப்புகள் 1. பாண்டியன் ஸ்ரீவல்லபன் கி.பி. 816 முதல் 862 வரையில் அரசாண்டான். |