பக்கம் எண் :

  

18. பாணபத்திரன்

இந்தப் பாண்டியனுடைய அரண்மனையில் இசைப் புலவனாக இருந்தவன். இசைக் கலையில் பேர்போன இவன் பாணர் குலத்தவ னாகையால் இவனைப் பாணபத்திரன் என்று கூறினார்கள். வரகுண பாண்டியனுடைய தந்தையாகிய ஸ்ரீ வல்லபன் காலத்திலும் பாணபத்திரன் அரண்மனையில் இசைப் புலவனாக இருந்தான். அரண்மனைப் புலவனாகையினால் அதன் அடையாளமாக பாணபத்திரன் பட்டும் மணிமாலையும் பெற்றிருந்தான்.

இசைப் புலவன் பாணபத்திரனும் சிவபக்தன். அரண்மனையில் இசைபாடின பிறகு மதுரைச் சொக்கநாதர் ஆலயத்துக்குப் போய் அங்கு இசைபாடிக் கடவுளை வணங்குவான். இவனுடைய மனைவியான பாடினி ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் இசைவாது வென்று புகழ் பெற்றவள். யாழ் வாசிப்பதிலும், இசை பாடுவதிலும் வல்லவனான பாணபத்திரனின் புகழ் உலகமெங்கும் பரவியிருந்தது.

அந்தக் காலத்தில் சோழநாட்டிலே ஏமநாதன் என்னும் பேர் போன இசைப் புலவன் இருந்தான். ஏமநாதன் தன்னுடைய இசைப் புலமையைப் பாண்டி நாட்டில் புலப்படுத்த வேண்டு மென்று எண்ணினான். புகழ் பெற்ற பாணபத்திரனை இசைப் போட்டியில் வெல்லவேண்டும் என்றும் ஆசைப்பட்டான். ஆகையால் அவன் தன்னுடைய சீடர்களோடு பாண்டி நாட்டுக்கு வந்து மதுரை மாநகரத்தில் பாண்டியனுடைய சபையில் இசை பாடினான்.

அவனுடைய இசையைக் கேட்டு மகிழ்ந்த வரகுண பாண்டியன் அவனுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புகள் செய்தான். பரிசு களைப் பெற்றுக் கொண்ட ஏமநாதன் அரசனை வணங்கி “அரசர் பெருமானே! என்னை இசைக் கலையில் வெல்பவர் இந்த உலக்தில் ஒருவரும் இல்லை” என்று தன்னைப் புகழ்ந்து கொண்டான்.