பக்கம் எண் :

230மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 10

அவர்கள் பாடின இசைப் பாட்டுகள், கேட்டவர் மனத்தைக் கவர்ந்து மகிழ்வித்தன. நகர மக்கள் அவர்களை மெச்சிப் புகழ்ந்தார்கள். பாண்டியனுடைய இசைப் புலவரான பாணபத்திரனும் அந்தச் சீடர்களுடைய இசையைக் கேட்டு வியந்தான். ‘சீடர்களே இவ்வளவு நன்றாகப் பாடுகிறார்கள் என்றால் ஆசிரியனுடைய இசை மிகவும் சிறந்ததாகும் என்பதில் ஐயமில்லை ஏமநாதனுடன் பாடி இசை வெல்வது கடினமாகத் தான் இருக்கும் போலும். எதற்கும் சொக்கப் பெருமான் இருக்கிறான். கடவுள் திருவருள் இருந்தால் இசை செல்வேன்’ என்று பத்திரன் தனக்குள் கூறிக் கொண்டான். வழக்கம் போல சொக்கநாதர் திருக்கோயிலுக்குச் சென்று யாழ் வாசித்து இசை பாடி வீட்டுக்குச் சென்றான்.

நாளைக்கு அரச சபையில் பாணபத்திரனுக்கும் ஏம நாதனுக்கும் இசைப் போட்டி நடக்கப்போகிறது. ஏமநாதனும் பாணபத்திரனும் தேர்ந்த இசைப் புலவர்கள். இசைப் போட்டி கடுமையாகத்தான் இருக்கும். யார் இசையில் வெற்றி பெறப் போகிறார்களோ பார்ப்போம் என்று நகர மக்கள் பேசிக் கொண்டார்கள் நாளைக்கு நடைபெறப் போகிற இசையரங்கைப் பற்றி நகரமெங்கும் ஒரே பேச்சாக இருந்தது.

அன்று மாலை நேரத்தில் விறகு விற்கும் ஒருவன் விறகுக் கட்டு ஒன்றைக் தலைமேல் சுமந்துகொண்டு மதுரை நகரத்து வீதி வழியே நடந்துகொண்டிருந்தான். அவன் சற்று வயது சென்றவன். அவன் கையில் யாழ் ஒன்று இருந்தது. தெருக்கள் தோறும் சுற்றித் திரிந்து அலுத்தவன் போலத் தோன்றினான். அவன், இசைக் கலைஞன் ஏமநாதன் தங்கியிருந்த தெருவிலே நுழைந்தான்.

தலைமேல் விறகுக் கட்டும் கையில் யாழுமாகக் காணப்படுகிற அவனுடைய விசித்திரக் காட்சி அவனைப் பார்த்தவரின் மனத்தை ஈர்த்தது. விறகுக்கும் யாழுக்கும் என்ன சம்பந்தம்! ஏமநாதன் இருந்த வீட்டண்டை வந்தபோது அவன் இளைப்பாற எண்ணி விறகுக்கட்டை அவ்வீட்டுத் திண்ணையின் மேல் இறக்கி வைத்து ‘அப்பாடா’ என்று திண்ணைமேல் அமர்ந்தான். சற்று நேரம் களைப்பாறின பிறகு அவனுக்கு உற்சாகமும் ஊக்கமும் ஏற்பட்டது. அவன் தெம்பொடு இசைபாடத் தொடங்கினான். யாழைக் கையில் எடுத்துத் திவவுகளை வீக்கி யாழ் நரம்புகளைச் சரிப்படுத்தி மெல்ல யாழ் வாசித்துக்கொண்டு இசை பாடினான். யாழின் இசையும் பாட்டின் இசையும் ஒன்றியிணைந்