பக்கம் எண் :

  

8. சீமான் குரல்

வைகறைப் பொழுது. கிழக்கு வெளுத்திருக்கிறது. சேவல்கள் கூவுகின்றன. விடியற்காலத்துக் குளிர்ந்த காற்று வீசுவது மகிழ்ச்சியைத் தருகிறது. ராஜகிருஹ நகரத்து அரண்மனையிலே பிம்பிசார அரசர், காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ஆசனத்தில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருக்கிறார். பக்கத்திலே சண்பகம் என்னும் வெள்ளாட்டி அரசருக்குப் பணிவிடை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறாள். இந்தச் சமயத்தில், சந்தடியற்ற அமைதியான இக்காலை வேளையிலே, ஒரு குரல் அரசர் காதுகளில் விழுந்தது. “விடிந்து விட்டது; எழுந்திருங்கள்; தொழிலுக்குப் போங்கள்; எழுந்திருங்கள்.” இந்தக் குரல், அரண்மனை வேலைக்காரர்கள் குடியிருக்கும் தெருவிலிருந்து வந்தது. யாரோ ஓர் ஆள் இந்த வைகறைப் பொழுதிலே அரசருடைய பணியாளர்களை விழித்தெழும்படி கூவுகிறான்; இந்தக் குரல்தான் அரண்மனையி லிருக்கும் அரசர் காதில் விழுந்தது. பல முறை கூவிக்கொண்டு சென்ற இக்குரல் கடைசியில் மறைந்துவிட்டது.

இந்தப் புதுக் குரல் அரசர் மனத்தைக் கவர்ந்தது. அக்குரல் மறையும் வரையில், அரசர் செவிசாய்த்துக்கேட்டுக் கொண்டிருந் தார். இது வெள்ளாட்டி சண்பகத்திற்கு வியப்பை உண்டாக்கிற்று. வேலைக் காரர்கள் விடுதிகளில் வேலைக்காரர்களை எழுப்புகிற ஒரு கீழ்த்தர வேலைக்காரனுடைய குரல், மகத தேசத்து மன்னர் பிம்பிசார அரசனுடைய மனத்தைக் கவர்ந்தது அவளுக்கு வியப்பை உண்டாக் கிற்று. அந்தக் குரலைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அரசர், அக் குரல் மறைந்த பிறகு சண்பகத்தைப் பார்த்து, “இது செல்வச் சீமானுடைய குரல்” என்று கூறினார்.

சண்பகம் மறுத்துக் கூற எண்ணினாள். ஆனால், அரசரோ சிறந்த அறிவாளி; நுண்மதியுடையவர் என்று பலராலும் புகழப்படுகிறவர். ஆகவே, இவர் கூறுவதில் ஏதோ உண்மை இருக்கலாம் என்று சிந்தித்து, ஓர் ஏவலாளனை அழைத்து வேலைக்கார விடுதிகளில், அவர்களைக் கூவி எழுப்பியவன் யார் என்று அறிந்து வரும்படி அனுப்பினாள்.